2008 புது வருட வாழ்த்துக்கள்




உலமெங்கும் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற எமது உறவுகளுக்கு. எமது இதயம் கனிந்த புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்

டுபாயும் வெள்ளிக்கிழமையும்



வியாழக்கிழமையே வெள்ளிக்கிழமைக்கான கொண்டாட்டம் தொடங்கி விடும். மிக்சர் வாங்குவது, சோடா வாங்குவது, வீட்டுக்கு போன் பேசுவதற்கு காட் வாங்கிறது என்று ஒரே பரபரப்பு. மற்ற நாட்களை விட வியாழன் வித்தியாசமான நாள் தான்.

தங்கள் தொலைபேசிகளில் இருந்து தகவல் பறக்கும். அவர்கள் சந்திக்கபோவது அவர்களின் அண்ணாவாக இருக்கலாம். அல்லது தம்பியாக இருக்கலாம். இவர்களை விட இன்னும் பல பேரை சந்திக்கலாம். அந்தளவான பரபரப்புக்கு என்ன காரணம்?வெள்ளிக்கிழமை என்றால் டுபாயில் விடுமுறை நாள்.

நானும் அபிர் என்னும் இடத்தில் உள்ள ஒரு கம்பனில் வேலை செய்கின்றேன். போன புதிசில் ஒரு இடமும் போவது இல்லை. வேலையும் தங்கும் அறையுமாக இருந்தேன். கம்பனிக்கு பின்பக்கமாக அறையும் இருந்தது.
அன்று வியாழக்கிழமை அலுவலகத்தில் இருந்து ஒரு அறிவித்தல். ‘’தாசன் சனிக்கிழமை மெடிக்கலுக்கு போக வேண்டும்.’’ என்ற அறிவித்தல். தகவலை சுமந்து வந்த போமன் ‘’இரவுக்கு ஒன்றும் குடிக்க வேண்டாம்’’ என்று சிரித்தபடி கூறி விட்டு சென்றார். எனக்கும் ஒன்றும் புரிய வில்லை. ‘’மெடிக்கலுக்கும்’’ தண்ணீர் குடிக்கிறதுக்கும் என்ன சம்மந்தம்? என்று எனது மனதுக்குள் யோசனை.

அன்று இரவு பக்கத்து அறையில் இருக்கும். தமிழ் நாட்டை சேர்ந்த நண்பர்கள் திடீர் என்று எங்கள் அறைக்கு வந்து. தங்கள் அறைக்கு வரும்படி அழைத்தார்கள். என்ன விடயம் என்று எனக்கு புரிய வில்லை. அவர்கள் அறைக்கு சென்றேன். சிரித்த படி எல்லோரும் வரவேற்றார்கள். மட்டன், சுக்கா, மிக்சர் என்று கோப்பையில் இருந்தது. எல்லோரும் வட்டமாக இருந்து வெட்டு. திடீர் என்று மோகன் அண்ணா. தன் இடுப்புக்குள் இருந்து எடுத்தார். வழமையாக இருப்பது போல் கத்தி இல்லை. அது எம்.சி என்னிடம் ‘’தாசனுக்கு என்ன மாதிரி தண்ணீரோ,அல்லது சோடாவோ?’’ என்ற கேட்டபோது எனக்கு ஒன்றும் புரிய வில்லை கூட்டத்தில் இருந்த போமனை பார்த்தேன். அவர் சிரித்த படி இனி இங்கு இருப்பது அழகு அல்ல என்று நினைத்தரோ என்னவோ? அறையை விட்டு வெளியேறினார். போனவர் திரும்பி வந்து “தாசன் சனிக்கிழமை மெடிக்கலுக்கு போக வேண்டும்.’’என்று மீண்டும் ஒரு முறை கூறும் போது தான் விளங்கி விட்டது. வெறும் சோடா மட்டும் கிடைத்தது. அன்று இரவு முழுவதும் ஆங்கிலம் கதைக்க தெரியாதவர்களும், ஹிந்தி, கதைக்க தெரியாதவர்களும் வடிவாக ஆங்கிலம், ஹிந்தி போசினார்கள்.வழமையாக மற்றவர்களை அதட்டும் போமனுக்கும் அன்டைக்கு சேர்த்து வைத்து நடந்தது. காரணம் போமனும் இவர்களின் நண்பராகி விடுவார்.

வெள்ளிக்கிழமையென்றால் அநேகமான நண்பர்கள் அறையில் இருப்பது இல்லை. காலையே ஊர் சுற்ற புறப்பட்டு விடுவார்கள். முன்னர் எல்லாம் அறையில் இருந்து சன் தொலைக்காட்சியில் விசுவின் அரட்டை அரங்கம் பாப்பார்கள். விசு வெளியேறியவுடன் அவர்களும் வெளியேற தொடக்கி விட்டார்கள்.நானும் அறையில் இருப்பது இல்லை.

காலை எழும்பி பல்லை துலக்கி போட்டு. பட்டும் படாமல் முகத்தை கழுவி போட்டு. மெல்ல நடத்து போகலாம் சயா குடிக்க என்று எண்ணியபடி வெளிக்கிட பக்கத்து அறையில் இருக்கும். மோகன் அண்ணா. தலையில் கையை வைத்து கொண்டு அறை வாசலில் இருந்தார். பயந்து விட்டேன். அவர் வீட்டில் ஏதாவது பிரச்சனையோ. அவசரம் என்றாலும் இந்த கம்பனியில் பாஸ் போட்டு உடனே தரமாட்டார்கள். ஊரில் இருந்து ஒருவர் உறுதிபடுத்த வேண்டும். அப்போது தான் பாஸ்போட் கிடைக்கும். அவரிடம் விசாரித்தேன். நீங்கள், நான் நினைப்பது மாதிரி ஒன்றும் இல்லை. நேற்று இரவு நிறைய குடித்தது. அதனால் “மண்டை குத்துவதாக” கூறினார். இரண்டு கிளாஸ் குடித்தால் போதும் என்றால். கேட்டிர்களா? என்றேன். “ஒரு சயா குடிக்க எல்லாம் சரியாகி விடும்.’’ என்றார் சிரித்த படி.

இருவரும் வழமையாக சாப்பிடும் கடைக்கு சென்றோம். இன்டைக்கு ஆக்கள் குறைவு. லீவு நாள் தானே எந்த நேரமும் வந்து சாப்பிடலாம். சிரித்த படி வரவேற்றார். பசீர் சேட்டா இவர்தான் இந்த கடையின் கணக்காளர். ஆனால் புதிதாக வருவோருக்கு அவர் தான் கடை உரிமையாளர் என்று நினைப்பார்கள். நானும் அப்படி தான் நினைத்தேன் போன புதுசில். அந்தளவுக்கு கடையின் நிர்வாகம் அவர் கையில். ‘’என்ன தாசன் சாப்பிட போறியள்”? என்றார்.‘’இன்டைக்கு ஒன்றும் வேண்டாம் சாயா மட்டும் குடிப்பம்’’ அப்ப தம்பி மத்தியனத்திற்கு என்ன ‘’மட்டன் புரியானியோ அல்லது சிக்கனோ?’’ என்றார் சேட்டா. ‘’சிக்கன் அனுப்புங்கோ.’’ என்று கூறி விட்டு. மேசையை பார்த்தேன் தினத்தந்தி, மலையாள பேப்பர். என கிடந்தது. ‘’என்ன சேட்டா வீரகேசரி,தினக்குரல் எடுக்க சொன்னான் எல்லோ?” என்றேன். ‘’ஒடர் குடுத்து இருக்கு வரும் தம்பி’’ என்றார். நான் பேப்பரை கேட்டது இப்போது தப்பாக போய் விட்டது. பக்கத்தில் இருந்த தங்கராஜ் அண்ணா மெல்ல கதையை தொடங்கினார். ‘’நீங்கள் யானைக்கு போட்டு இருந்தால் ஏன் இந்த பாடு? அவன் எல்லோ பாதையை திறந்து விட்டவன். தமிழ் சனக்கள் எவ்வளவு சந்தோசமாக இருந்ததுகள். இப்ப எல்லாம் செத்து போகுதுகள்’' என்றார். நான் மெல்ல கடையை விட்டு கிளம்பி விடடேன் இது சிக்கலான கேள்வி? தங்கராஜ் அண்ணா நன்கு படித்தவர் அல்ல. திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனால் உலக விடயங்களை அறிந்து வைத்து இருப்பார். இன்றைக்கு நேற்று அல்ல இவர் இப்படி கேட்ப்பது . நான் வேலைக்கு போனதில் இருந்து. திடீர்,திடீரரென இப்படியான கேள்விகள் அவரின் வாயில் இருந்து முளைக்கும்.

நேரத்தை பாரத்தேன். காலை 7மணி பார் டுபாயிக்கு போக வேண்டும், சோனப்பூருக்கும் போக வேண்டும். அங்கு அப்பப்பாவின் சகோதரியின் மகன். முருகதாஸ் அண்ணா அங்கு இருக்கின்றார். தன்னிடம் வருவது இல்லை என்று முறைப்பாடு.’’ இலங்கையிலும்; அப்பாவிடம் முறைப்பாடு செய்து இருக்கிறார். எப்படியும் அவரிடம் போக வேண்டும். ‘’அதற்கு இடையில் கோவிலுக்கும் போக வேண்டும். அபிர் சந்திக்கு எல்லா பஸ்சும் வரும்.’’ பார் டுபாய் என்றால் 61, 63என்றால் சோனப்பூர், 64என்றால் தேரா டுபாய் இவையேல்லாம் போக வேண்டிய பஸ்களின் இலக்கம். தேரா டுபாயை பற்றி ஒரு ரகசியம் பின்னர் சொல்லுகின்றேன்.

61ம் இலக்க பஸ் வந்தது “இதிலை போனால் கோவிலுக்கும் பார் டுபாய்யிக்கும் போய் விட்டு, அப்படியே போட்டிலில் தேராவுக்கு போகலாம். தேராவில் இருந்து 63e எடுத்தால் சோனப்பூர் போகலாம்.’’ இது எனது பயணத்தின் ஏற்பாடு. என்னுடன் மாணிக்கம் அண்ணா வந்தார். அவரும் தமிழ் நாடு தான். ஆனால் அவர் கிறிஸ்தவர் எங்களுடன் பிள்ளையார் கோவில், கிருஸ்ணன் கோவில் என்று வருவார். அத்துடன் கோதைகளையும் பார்க்கதான்.

ஒழுங்கு முறையென்றால் டுபாய் தான். வரிசையாக தான் நின்று கோவிலுக்கு போக வேண்டும். எவ்வளவு மனதில் கஸ்டம் இருந்தாலும் கோவிலுக்கு போய்விட்டால் ஒரு நிம்மதி. எங்கள் ஊர் கோவில்களில் கண்பது போல் எதோ ஒரு சந்தோசம். சரசரக்கும் பட்டுபுடவையிடன் பெண்கள் கூட்டம், நாங்கள் தழிழ் பெண்கள் அழகு அல்ல என்று கூறினாலும். சக மொழி நண்பர்கள் அவர்களுக்கா காத்து இருப்பார்கள். குளிர்த்து விட்டு தலை மயிரை உலர விட்டபடி தலையில் மல்லிகை பூ வைத்து சுடிதார் போட்டு கொண்டு வரும் போது எப்படி எல்லாம் வர்ணிப்பார்கள். ‘’நீங்கள் எல்லாம் கொடுத்து வைத்தனீர்கள்’’ என்று எங்களை பார்த்து கூறுவார்கள். அவர்களின் வர்ணிப்பு வைரமுத்துவின் காதல் கவிவரிகளே தோற்று விடும். அங்கு தான் ஒரு முறை புன்னகை இளவரசி சினோகாவையும் பார்த்தோம். அவரும் டுபாயில் தான் படித்தவராம் அடிக்கடி இக் கோவிலுக்கு வருவாராம்.

மசுதிக்கு பக்கத்தில் இருக்கும் இந்து ஆலயத்துக்குள் சென்று வரிசையாக நின்றபடி கோவிலுக்குள் நுழைந்தேன். உள்ளே பக்தர் கூட்டம். குழந்தைக்கு முதல் சோறு கொடுப்பதற்கும், தமது இறந்த உறவினர்க்கு திதி கொடுப்பதற்க்கும், என்று ஒரே பரபரப்பு. எனக்கு ஊர் நினைவு வந்தது.

எனக்கு டுபாய்யில் வேலை செய்வதற்க்கு விசா கிடைத்தவுடன். நித்தி மாமாவும், மாமியும் எனக்கு தெரியாமல் கதைத்த விடயம் என் காதுக்கு எட்டியது. ‘’இவன் அங்கை போய் என்ன செய்ய போறான்? ஒழுங்க கதைக்க தெரியாது. அதுவும் முஸ்லிம் நாடு பிழை விட்டால் கோழிக்கு சுருக்கு போடுற மாதிரி போடுவாங்கள்.’’என்று நித்தி மாமா கூற கோயில் மாடு மாதிரி மாமி தான் அவரின் கருத்தை எற்பதாக தலையாட்டினார். இதை விட மனைவியின் சகோதரம் அனுப்பும் காசில் சிலவு செய்து கொண்டு. ஊர் மர நிழலில் இருந்து கொண்டு மண்டான் சுருட்டையும் ஊறிஞ்சி கொண்டு ஊர் புதினம் பேசும் ஒருவர். ‘’அவன் உமாபதியே சொன்னவன் சவுதியில் எவ்வளவு கஸ்டம் என்று. நீ போய் என்ன செய்ய போறாய்?’’ என்றார் நான் கொடுப்புக்குள் சிரித்தேன் அம்மன் கோவில் நல்ல தண்ணீர் கிணற்றில் இருந்து சைக்கில் பாரில் தண்ணீர் குடம் வைத்து ஒட தெரியமல். பக்கத்து வீட்டு பெடியனுக்கு ஐந்து ரூபா காசு கூடுத்து தண்ணீர் எடுக்கும் இந்த பெரியவர்க்கு பதில்சொல்ல நான் விரும்ப வில்லை.

ஆனால் எனக்கு மனத்தில் சிறிய பயம். வீட்டில் இருக்கும் போது. காலையில் குளிர்த்து விட்டு ஊற்று வினாயகர் கோவிலுக்கு போய் வணங்கி விட்டு தான் காலை சாப்பாடோ அல்லது அடுத்த வேலையோ நடக்கும். இது நான் இல்லை என் சக தோழர்களும் அப்படிதான். இவர்கள் சொன்ன பீதி கதையால் அம்மா தந்த வற்றாப்பளை அம்மன் கோவில் விபூதி பக்கற்யையும், காச்சல் வந்த போது பிள்ளையார் கோவிலில் மயில் ஐயா மந்;திரம் சொல்லி. கையில் கட்டி விட்ட நூலையும் கழட்டி கொழும்பில் உள்ள மாமா வீட்டை வைத்து விட்டு கையில் இருந்த மோதிரத்தையும் கழட்டி அப்பாவின் கையில் கொடுத்து விட்டு விமானம் ஏறினேன்.

பிரசாதம் என்று கூறி பஞ்சாபி ஒருவர் விபூதியை கொடுத்து கொண்டு இருந்தார். ஒடி சென்று இரண்டு கைகளில் நிறைய விபூதியை வாங்கி கொண்டேன். படிக்கும் போது சைவ சமயம் படிப்பித்த மகாலிங்கம் சேர் சொல்லி தந்தது போல். விபூதியை வலது கையால் தொட்டு தலையை உயர்த்தி மேலே பார்த்து கொண்டு சிவ, சிவ, சிவ என்று மனதுக்குள் சொல்லி. நினைவுக்கு வந்த ஊர் கோவில்கள் எல்லத்தையும் நினைத்து ஆசை தீர விபூதியை பூசினேன்.

பூசை முடித்து வெளியே செல்ல வேண்டுமாயின். அன்னதான அறைக்கு சென்று தான் வெளியே செல்ல வேண்டும். ஆகவே எல்லோரும் சாப்பிட வேண்டும். பாண் கடலை கறி, பொங்கல், இப்படி கிடைக்கும். எங்கள் ஊர் கோயில் திருவிழா காலங்களில் அன்னதானத்தில் சில வேனையில் சண்டை கூட வரும். அன்னதானம் கொடுப்போர் சில வேளைகளில் கோபம் அடைந்து அடித்தும் இருக்கின்றார்கள். இதனால் அவர்களின் நேர்த்தி சிறந்த முறையில் அமைந்தா? என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் இங்கு புரியாத மொழிகளுடன் அன்புடன் அவர்களுக்கு உபசரிப்பது ஆச்சரியமாக இருக்கின்றது. சிரித்த முகத்துடன் உணவை பரிமாறுவார்கள். பஞ்சாபி பெண் ஒருத்தி சிரித்த முகத்துடன் தந்த இரண்டு துண்டு பாணும் கடலை கறியையும் வாங்கி கொண்டு கடற்கரையில் நின்றபடி சாப்பிட்டேன். கண்களில் கண்ணீர் துளிகள் பரோட்டாவும் மட்டனும் சாப்பிட்டு ருசி கெட்ட வாய்க்கு. அம்மாவின் கையால் சாப்பிடுவது போல் இருந்தது.

நேரத்தை பார்தேன் மாலை 6மணி. எனது தொலைபேசி சத்தம் போட்டது. எதிர் முனையில் அறை நண்பன் குமார். வரும் போது வசந்தபவானில் இரண்டு பொங்கல் பார்சல் வாங்கி கொண்டு வர சொன்னான். வசந்த பவானில் பார்சலுக்கு ஒடர் கொடுத்து விட்டு நானும் சாப்பிடுவதற்க்கும் மேசையில் தட்டு வந்தது. கூடவே இரண்டு முள்ளு கரண்டி. கரண்டியுடன் நான் ஒரு போரட்டமே நடத்தினேன். முடியவில்லை. இப்படி சாப்பிட்டால் பொங்களின் ருசியும் போய் விடும். என்று சுற்று முற்றும் பார்த்து விட்டு கையால் விளையாட தொடங்கினேன். கவுடரில் இருந்த கந்தசாமி அண்ணா சிரித்தார். அவருக்கு எனது சிரிப்பின் மூலம் எனது பதிலை சொன்னேன். கை ருசி என்பது சொல்லவா வேண்டும். அம்மா நிலாவை காட்டி கைளால் ஊட்டி விட்ட நினைவுகள் எதிர் சுவரில் தொங்கிய நடிகை நிலாவின் படத்தை பார்த்து கொண்டு எங்கள் வீட்டு நிலாவை எப்போது பார்ப்பேன்? என்ற நினைவுடன் சாப்பிட தொடங்கினேன்.