குஞ்சியேல்லோ கொழும்புக்கு வந்திட்டா

சுமார் இருபது வருடங்களுக்கு முன் கரவெட்டி கிழவிதோட்டத்திலை சின்னாச்சி எண்டால் எல்லாருக்கும் தெரியும். இப்ப குஞ்சி எண்டாத்தான் தெரியும். நானும் கன நாளாய் யோசிச்சனான். ஏன் இவாவை குஞ்சி எண்டு கூப்பிடினம் எண்டு. பெரியவர்களும் சரி சிறியவர்களும் சரி அவாவை குஞ்சி எண்டுதான் கூப்பிடுவினம். நான் மட்டும் எங்கள் உறவினர்களாக இருந்த படியினால் அம்மா எனக்கு “குஞ்சியம்மம்மா” எண்டு சொல்லித் தந்து நானும் என் சகோதரர்களும் அம்மம்மா என்றே கூப்பிடுவம். ஆனா குஞ்சியம்மம்மாவின் பிள்ளைகள். எல்லாம் தாயை குஞ்சியெண்டே கூப்பிடுவினம். எனக்குள் இருந்த கேள்வியை அம்மாவிடம் ஒரு நாள் கேட்டேன். அதற்கு அம்மா கூறினா. தன்ர தாய்க்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், இரண்டு பெண் பிள்ளைகளும். என்றும் அதில குஞ்சி தான் கடைசியாய் பிறந்த படியினால் அவாவை எல்லாரும் குஞ்சி எண்டு கூப்பிட அவையிட்ட பிள்ளைகளும் குஞ்சியெண்டெ கூப்பிட்டவை. இன்னுமொரு விடயத்தையும் அம்மா சொன்னா. அந்தக் காலத்தில தாயின் இளைய சகோதரியை சித்தி , அன்ரி எண்டு கூப்பிடுவதில்லை. சின்னம்மா அல்லது குஞ்சி எண்டே கூப்பிடுவினம். இது இப்படியே பழகி ஊர்க்காரர் எல்லாம் குஞ்சியெண்டே கூப்பிட தொடங்கிற்றினம்.

இப்ப குஞ்சி கொள்ளுப் பேரனையும் பார்த்துவிட்டாள். எல்லோருடனும் அன்பாகவும் நகைச்சுவையாகவும் பேசுவதால் ஊர் மக்களுக்கு பரிச்சியமாக போய்விட்டார். குஞ்சிக்கு கன நாளாய் கொழும்புக்கு போக வேணுமெண்டு ஆசை. பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில. மூத்த மகன் மட்டும் கலியாணம் செய்து கொண்டு பக்கத்து ஊரில் இருக்கிறார். எப்பவும் இடைசுகம் கலியாண வீடுகள், ஊர்க் கோயில் திருவிழா எண்டால் தாய் வீட்டு ஒழுங்கையால் அவரின் மோட்டார் சைக்கிள் வந்து போகும்.

முந்தியெண்டால் அடிக்கடி வெளிநாட்டுச் சனம் யாழ்ப்பாணத்துக்கு வந்து போகும். உந்த முகமாலை பாதை திறந்திருக்கிற நேரத்தில இவள் தெய்வானை அக்காவின்ர தேவகி குடும்பத்தோட வந்து போனாள். அப்ப வீட்டுக்கு வந்தாள். அப்பதான் சொன்னவள் நிர்மலா அக்காவுக்கும் ஊருக்கு வரவேணும் எண்ட ஆசையாம். உடன வர முடியாது ஏன் என்டால் இப்பதான் லண்டனில வீடு வாங்கினவா. அதோட பிள்ளைகளின்ர படிப்பும். அதால ஒரு ஐந்தாறு மாதத்திற்கு பிறகு தான் வருவா என்று தேவகி கூறிய தகவல் இது.

நிர்மலா ஒவ்வொரு நாளும் டொலிபோன் கதைக்கும் போது அடுத்த மாதம் வாறன் எண்டு சொல்லிச் சொல்லியே முகமாலைப் பாதையும் மூடியாச்சு. இனி எப்படி வருவது? எல்லாம் கஸ்ரம். நீ கொழும்புக்கு வாணை. வந்து அக்கா வீட்டை நில். அக்கா வீடும் சும்மா தானே இருக்கு எண்டு நிர்மலா கூற.

இப்ப இரண்டு மாதமாய் கொழும்புக்கு போற அடுக்கு. கிழவிதோட்டமே களை கட்டி விட்டது குஞ்சி கொழும்புக்கு போகப் போறா எண்டு. குஞ்சியும் வெளிநாட்டில இருக்கிற பிள்ளைகளுக்கு பைக்கற்று பண்ணி தபாலில் அனுப்ப மிளகாய் அரைக்கிறது. பொரி அரிசி மா திரிக்கிறது எண்டு ஒரே ஆரவாரம்;. சனத்தோட கதைக்க கூட நேரம் இல்லை. இவ்வளவு இருந்தாலும் ஒவ்வொரு நாளும் பூப்புடுங்கி கிழவிதோட்ட பிள்ளையார் கோவிலுக்கு ஒரு மாலை கட்டிக் கொடுக்க வேண்டும். அதற்கு பிறகுதான் காலைச் சாப்பாடு. சில நேரம் மத்தியானத்திற்கும் சேர்த்து உலை வைக்கப்படும். இத்தனைக்கும் இடையிடையே கொழும்புக்கு போன் பண்ணி அங்க இருக்கிற செல்லம்மாக்காவின் மகள்ளுடன் தனது பிரயாண ஒழுங்குகளை உறுதிப்படுத்திக் கொள்வார். போகும் திகதி கொழும்பில் வந்து விமானத்தில் வந்து பின்னர் பஸ்சில வெள்ளவத்தையில இறங்கிற இடம். நேரம் எல்லாம் இப்படியென ஏற்பாடு. இதனை பார்த்த பேரன் “என்ன குஞ்சி அமைச்சர் போற மாதிரி ஒழுங்குகள் நடக்குது” என்றான். “உனக்கு என்னடா விளையாட்டாய் இருக்கு. கொழும்புக்கு போறது எண்டால் சும்மாவோ விதானையிட்ட போக வேணும் பிறகு ஏஜியேட்ட போக வேணும் எண்டு எத்தனை வேலைப்பாடு. நீ என்னென்டா என்னோட விளையாடுறாய்” என செல்லமாக கோபித்தாள்.

கொழும்புக்கு போற நாளும் வந்திட்டுது. நாளைக்கு பயணம். இவா செல்லம்மக்கா சொன்னவா''பலாலியில செல் விழுதாம்'' ஒரு மோதகப்பூசையை பிள்ளையாருக்கு செய். அவா சொல்லுறது சரிதான் முதல் முதல் விமான பயணம். எண்டாலும் கிழவி தோட்ட பிளளையார் கைவிட மாட்டார். எண்டாலும் பாருங்கோ இங்க கொஞ்சப்பேருக்கு முகம் சரியில்லை. இந்த வயசிலையியும் கொழும்புக்கு போக வேணுமோ எண்டு. அதுக்கு என்ன செய்யிறது? அந்த நேரத்தில கஸ்ரப்பட்டு பிள்ளைகளை வளர்த்த படியால் தாயை கூப்பிடுதுகள். சில நேரம் இவா கனடாவிற்கு போயிடுவவாம் எண்டு சில பேரின் சில்லறைக் கதை. நான் எண்டெண்டு போவன். இஞ்ச கோவிலுக்கு மாலை கட்டிக் குடுக்க வேணும். இவன் பேரனின் கலியாணம் முடிய ஊருக்கு வந்திடுவன். எண்டு தனக்கு அண்டிய ஆட்களுக்கு சொன்ன கதை இது.

இண்டைக்கு பயணம் எல்லா ஒழுங்கும் சரி. கொழும்பில் இருந்து சிக்னல் கிடைத்து விட்டது அங்கு இறங்கும் போது அழைத்து செல்வதற்கு.

“டே ஜெயம் இவன் சீரிபி கிருஸ்ணபிள்ளையிட்ட காருக்கு சொல்லு உன்ர ஆட்டோவில போகலாம் தான். கரவெட்டியில இருந்து யாழ்ப்பாணம் போறதுக்குள்ள நாரி முறிஞ்சு போகும்” நடக்க முடியா நிலையிலும் பெரிய சூட்கேசுடன் குஞ்சியின் கொழும்பு பயணம் ஆரம்பம். கதைக்கமா இருந்தவையிலும் பயணம் அனுப்பும் சாட்டில் கொழும்பில் உள்ள பிள்ளைகளுக்கு பார்சல் கொடுக்க வந்திருந்தனர். “எணை குஞ்சி இதை குறை நினைக்கமா கொண்டு போ நீ போன் பண்ணு பிள்ளைகள் வந்து எடுக்குங்கள்” என்று தாளம் போட்ட கதைகள். சரி சரி எங்கட சனத்தின்ர குணமே இதுதான். தேவையெண்டால் தான் வருவினம்” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு காருக்கு ஏறினாள். பிள்ளையாரைப் பார்த்துக் கொண்டு ஒரு கும்பிடு போட்டுக் கொண்டு எல்லாருக்கும் கையசைத்து விடை பெற்றாள். இனி வெள்ளவத்தையில போய் இறங்கின பிறகுதான் நிம்மதி.

“கிழவி தோட்ட பிள்ளையாரே எவ்வளவு சனம் போகுதுகள் நான் மட்டும் கொழும்புக்கு போக வேணும் எண்டால் எங்கட ஊர்ச்சனத்திற்கு விடியாது” எணை அம்மம்மா எங்க கொழும்புக்கே என சக பிரயாணிகளின் விசாரணை. இதிலேயும் பாருங்கோ ரகசியமாக சில இளம்வட்டங்கள் கதைக்கிறது கேட்குது. “அங்க பார் கிழவிதோட்ட கிழவியை பெரிய சூட்கேசோட வெளிக்கிட்டுட்டா..பிள்ளைகள் அனுப்பிற காசில விசிட் பண்ணுறா.” இது குஞ்சியின்ர காதில விழுந்தாலும் காட்டிக் கொள்ளமால் பிரயாணத் துணைக்கு ஆள் வேணும். எண்டாலும் எங்கட சனம் நல்ல கெட்டிக்காரர் தான். எங்க இருந்து வாறன் எண்டதை என்ர சூட்கேசில இருந்ததை பார்த்து கண்டுபிடித்து கதைக்க தொடங்கிடுங்கள். பிளேனும் வெளிக்கிட்டு விட்டது. “ஏடா சுவாதம் குத்துவனே..பிளேனை மேலே தூக்கிப் போட்டு பேந்து கொஞ்ச நேரத்தில நிற்கிற மாதிரி இருக்கு..நான் நினைச்சன் சரி. இதோட என்ர கதை சரி. எண்டு வேண்டாத தெய்வங்கள் இல்லை. பேந்து தான் பக்கதில இருக்கிற பிள்ளை சொன்னாள் அம்மம்மா கொழும்பு வந்திட்டுது. என்னால நம்பவே முடியேல்லை. கொழும்பில வந்து இறங்கியாச்சு. எங்க அந்த இளம்வட்டங்கள் என குஞ்சியின் கண்கள் தேடின. ஒரு மாதிரி குஞ்சி பெடியளை கண்டு பிடிச்சிட்டா. “ யார் தம்பி கிழவி தோட்ட சனத்தை பற்றி கதைச்சது? கிழவி தோட்டத்தாரை பற்றி தெரியுமோ நல்லவங்கள் கோபம் வந்தால் தெரியாது.” எனக் காரசாரமாக விளாச பெடியள் நிற்கிற இடம் தெரியமால் மறைஞ்சிட்டுதுகள்.

வெள்ளைவத்தையில் வந்து இறங்க ஒரு ஆட்டோ வந்து பக்கதில நிண்டுது. ஏறுங்கோ அம்மா எங்க போக வேணும் கொண்டு போய் விடுறன். இது கொழும்பு ஆட்டோகாரனின் அன்பு வழியும் வார்த்தைகள். “நல்ல கதை எனக்கு தெரியாதே கொழும்புப் புதினம். போன முறை அன்னம்மாக்கா வந்து எல்லாத்தையும் குடுத்திட்டு வெறுங்கையோட போனது. இவர் வந்திட்டார்” இதற்கு முதல் நிர்மலா சொல்லிய அறிவுறுத்தலும் நான் சொன்ன ஆட்கள் வருமட்டும் இருக்கிற இடத்தை விட்டு அசையக் கூடாது.

இப்போது கொழும்பில் குஞ்சி தனது பயணத்தை நிறைவு செய்து கொண்டு ஊரில் இருக்கும் உறவினர்களுடனும் வெளிநாட்டில் இருக்கும் பேரப் பிள்ளைகளுடனும் தனது பயண அனுபவத்தை கதைத்துக்கொண்டு இருக்கிறா.

ஜோர்ஜ் புஷ்சின் தோளில் ஏறி ஆடிய இந்திய பெண் (ஒரு சூடான வீடியோப் பதிவு)

அண்மையில் யூரியூப்பில் ஏதோச்சையாக இந்த வீடியோவை காணக் கிடைத்தது. ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த ஒரு பாடலையும் வேறு நினைவூட்டுகின்றது. எந்தப் பாடல் என்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

வள்ளி லண்டனில்

வள்ளி இப்போது லண்டனில் இருக்கிறாள். உங்களுக்கு தெரியுமோ? அவளுக்கு குடியுரிமையும் கிடைத்து விட்டது.

என்ன யோசிக்கிறியள்..? நான் சொல்வது உண்மை. ஓம் எங்கள் நாட்டு மக்களை விட அதிகமாக பிறநாட்டு மக்களும் அவளை போய் பார்த்து வருகின்றார்களாம்.

நீங்கள் நல்ல யோசிக்க வேண்டாம். என்ன விசயம் என்டால் பாருங்கோ.


சிறீ லங்கா அரசாங்கத்தாலை 1981ம் ஆண்டு இங்கிலாந்து அரசாங்கத்திற்கு ஒரு நினைவு பரிசாக ஒரு குட்டி யானை ஒன்று வழங்கப்பட்டது. அந்த யானைக்கு பெயர் தான் வள்ளி.

இந்த வள்ளி யானை இப்போது லணடனில் உள்ள ‘’வேல்ஸ்’’ முருகன் ஆலயத்தின் அருகில் இருக்கின்றது. தற்போதும் சுகத்துடன் வாழும் வள்ளி 3 தொன் இடையும் 8அடி உயரமும் உடையது.

மேல் குறிப்பிட்ட ஆலயத்திற்கு செல்லும் பத்தர்கள் முருகனையும் தரிசித்து கொண்டு வள்ளியிடமும் சென்று போகின்றனர். பாருங்கோ யானைக்கு சிட்டிசன் குடுக்கிறவை எங்கட ஆக்களுக்கு குடுக்க மாட்டினமோ..?

குருதியில் குளித்த எழுதுகோல்

ஒ......அந்த கொடிய கணங்கள்
என் இதயத்தில் கனக்கின்றன
இது உங்கள் இதயத்திலும் பதியட்டும்.......


பாவிகள் கொன்ற என்
பிஞ்சு சோதரனின் சட்டைப்பையில்
குருதியில் குளித்த எழுதுகோல் எழுதுவதில்



எங்கள் எழைக்குடிசை அடுப்பில்
அரிசி வெத்தும் வேகாத வேளை.......
எல்லாவீடும் உண்டு உறங்கும் வேளையது
பள்ளியிலிருந்து வந்த தம்பி
பசியோடு ஆவலாதிப்பட்டுண்டு
ஆறும் வேளை........அக் கொடுகை நிகழ்ந்தய்யோ.


வானலையில் வந்த வல்லூகளின்
இரண்டு எச்சங்கள் விழுந்து சிதற
காதைக் கிழிக்கும் பேரோசை
குடிகள் பற்றி எரியும் சுவாலை
அதனிலும் மேலேழும் அவலக் குரல்கள்



எரியும் குடிசை நோக்கி
என் கால்கள்விரைகின்றன
மனமோ சிதறி சுழன்றடிக்குது.


வெந்த குடிசையின் வெளியே
செல்ல பூளையின் சிவத்த தசை
வீடென்பது அதொரு கொங்கனவாய்



‘’சின்னவன் சின்னவன்’’
என் மனம் கலங்குகின்றது
அங்கே அங்கே........ அந்தக் கொடுமை
உண்ட சோறு வெளியே
சோற்றுக் கிண்ணியில் மண்டைக் குழம்பு......


இனியும் எத்தை உயிர்ரோ....
வல்லூறின் பசிக்கு இரையாகுமோ?

அறுபதுகளில் ஆரம்பித்து அறுபதைத்தாண்டும் தில்லை

இலங்கை கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரும் எழுத்தாளருமான உடுவை எஸ். தில்லைநடராஜா தனது 60 வது வயதினை பூர்த்தி செய்துள்ளார்.

07.07.1947 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வடமாராட்சியில் உள்ள உடுப்பிட்டி என்னும் கிராமத்தில் திரு.திருமதி சிங்கரம்பிள்ளை இராஜாம்மாள் தம்பதியினர்க்கு மூத்த புதல்வனாக பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை வடமாராட்சியில் புகழ்பெற்ற பாடசாலைகளின் ஒன்றான உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியிலும், உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கற்றார்.

சிறுவயதில் இருந்து இவர் கல்வியிலும் இலக்கியத் துறையிலும் ஈடுபாடு கொண்டு செயற்பட்டு வந்தார். சிறுவயதில் பேச்சு போட்டிப் ,கட்டுரை போட்டி என்பனவற்றில் பங்குபற்றி பல பரிசுகளை பெற்றுள்ளார். பாடசாலை மாணவனாக இருக்கிற காலத்தில் 14 வயதில் “மாணவன்” என்ற சஞ்சிகையை அச்சிட்டு அதன் ஆசிரிராக இருந்தார். எஸ்.ரி.ராஜன் என்ற புனைப்பெயருடன் அந்த சஞ்சிகையை நடாத்தி வந்தார்.

1967 ஆம் ஆண்டு எழுதுனர் பரீட்சையில் சித்தியடைந்து, அரச சேவையில் நுழைந்தார். முதல் சேவையை எழுதுனராக கொழும்பு பொலிஸ் தலைமைக் காரியலத்தில் தனது பணியை ஆரம்பித்தார். பின்னர் நுவரெலியா, கல்கிசை , கொழும்பு போன்ற இடங்களில் கடமையாற்றினார்.

1978 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவை பரீட்சை மூலம் முதல்முதல் கூட்டுறவு திணைக்களத்தில் உதவி ஆணையாளராக வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள பல மாவட்டங்களில் கடமையாற்றினார்.

1989 இல் வடக்கு கிழக்கு மாகாண கடற்றொழில் பணிப்பாளராகவும், 1992 தொடக்கம் 1994 ஆண்டுவரை வவுனியா அரச அதிபராகவும், 1995 -1997 ஆம் ஆண்டு வரை கிளிநொச்சி அரச அதிபராகவும், 1998 – 1999 வரை இந்து சமய திணைக்கள பணிப்பாளராகவும், 1999 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகவும் நியமனம் பெற்று இன்று வரை பணியாற்றி வருகின்றார்.

1993 ஆம் ஆண்டு பகுதியில் வவுனியா அரச அதிபராக கடமையாற்றிய போதும் கிளிநொச்சி யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டார். அந்த வேளையில் அவரை பலர் தடுத்தனர். அங்கு செல்ல வேண்டாம் என்று. எமது மக்களுக்காகவே இப்பணியை மேற்கொள்ளுகின்றோம். இதுவும் மக்களுக்காகவே செல்லுகின்றேன் என கூறி சென்று நிலைமைகளை கவனித்து அங்கு உள்ள மக்களின் அவல நிலைமைகளை ஊடகங்களில் கொண்டு வந்த முதல் தர அரச உத்தியோகத்தர் ஆவார்.

1995 ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திரு.பொன்னம்பலம் யாழ்ப்பாண அரச அதிபராக கடமையேற்றதை தொடர்ந்து பலரின் வேண்டுகோளின் படி கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக பதவியேற்றார். இவர் கிளிநொச்சி மாவட்டத்தில் செய்த பயன்மிகு வேலைத்திட்டங்கள் பல. எந்த நேரமும் மக்கள் அவரை சந்திக்கவும் ஒழுங்கு செய்திருந்தார்.

அவரின் உத்தியோகபூர்வ விடுதியிலும் சந்திப்பு மேற்கொள்ளவும் ஒழுங்கு செய்திருந்தார். இந்த வேளையில் யாழ்ப்பாண இடம்பெயர்வு இடம்பெற்றது. இந்நேரத்திலேயே இரவு பகல் என்று பாராது மக்களுக்கான வேலைத்திட்டத்ததை மேற்கொண்டார்.

ஒரு சமயம் அவரை சந்திப்பதற்கு அவரின் அலுவலகத்திற்கு சென்று இருந்த போது கிளாலி கடற்கரைக்கு சென்று விட்டதாக செய்தி கிடைத்தது. அவரின் நாங்கள் அவசியம் சந்திக்க வேண்டிய நிலைமை இருந்ததால் கிளாலிக்கே சென்று இருந்தோம்.

அங்கு அவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகின்ற இடம்பெயர்ந்தவர்களை படகில் இருந்து வெளியேறுவதற்கு உதவிக்கொண்டு இருந்தார். கடற்கரையில் நின்று கொண்டே அங்கு வந்து சேர்ந்தவர்களை அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். கிளிநொச்சியில் இருந்து தகவல் பெறக்கூடிய வசதியோ தகவல் அனுப்ப கூடிய வசதியோ இல்லாத வேளையில் கூட, இவ் இடம்பெயர்வின் அவலங்கள் உலக ஊடகங்களின் பிரதிபலிக்க காரணமாய் இருந்தார்.

அரச அதிபராக இருந்த போதும் சில சமயங்களில், சைக்கிளிலேயே அவரின் வேலைத்திட்டம் நகர்ந்தது. சைக்கிளில் சென்று மக்களின் சேவையை செய்தார். அந்த மாவட்ட மக்களின் அன்பை பெற்றவர் தில்லைநடராஜா. இதனை தொடர்ந்து கிளிநொச்சி இடப்பெயர்வு இடம்பெற்றது. இந்த வேளையில் மயிரிழையில் உயிர்தப்பினார்

தில்லைநடராஜா. கிளிநொச்சி நகரில் இருந்த மக்கள் இடம்பெயர்ந்து கொண்டு இருந்த வேளை அவர்களை கவனிக்கும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.

ஸ்கந்தபுரத்தில் இடம்பெயர்ந்து கிளிநொச்சி மாவட்ட அலுவலகம் இயங்கியது. இந்த அலுவலகம் ஒரு மரத்தின் கிழேயே இயங்கியது. அப்படி இருந்த போதும் வேலைகள் வேகமாய் நகர வைத்தார் இவர்.

14 வயதில் இலக்கிய பணியில் ஈடுபட தொடங்கினார். அப்போது சிறுவர்களின் மனதில் இடம்பிடித்த “சுதந்திரன்” வார இதழில் “மந்திரக்கண்ணாடி” என்ற சிறுவர் தொடர்கதை எழுதி “மந்திரக்கதை மருமகன்” என்று பத்திரிகை ஆசிரியரின் பாராட்டை பெற்றார். பின்னர் இவர் வவுனியா அரச அதிபராக இருந்த வேளையில் மந்திரக்கண்ணாடி நூலையும் கடற்கன்னி என்ற இன்னொரு இவரது சிறுவர் கதை நூலையும் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் அபிவிருத்திக்காக வெளியிட்டார்.

இவரது முதலாவது சிறுகதை தொகுதியான “நிர்வாணம்” 1992 ஆம் ஆண்டு இந்தியாவில் லில்லி தேவசிகாமணி இலக்கிய பரிசு திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு பரிசிற்கும் பாராட்டுக்கும் உரியவரானார். இதனை தொடர்ந்து “அப்பா” என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்த நூலை வாசித்த முன்னால் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் வாழ்த்து செய்தி அனுப்பினார்.

வடக்கு போர்க்கால சூழலை படம் பிடித்து காட்டும் “நம்பிக்கையுடன் நிம்மதியை நாடும் யாழ்ப்பாணம்” என்ற நூல் இவரது சமூக அக்கறைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். “கல்யாணம் முடித்துப் பார்” என்ற நகைச்சுவை சிறுகதை நூல் இலக்கியத்தில் இவரின் பல்பரிமாண தோற்றத்திற்கு ஒரு சான்றாகும்.

நாடகத்துறையிலும் புகழ்பெற்றவர்களான கே.எஸ் பாலச்சந்திரன், எஸ். எஸ் கணேசபிள்ளை ஆகியோருடன் பல நாடகங்களை நடித்துள்ளார். “அசட்டு மாப்பிள்ளை”நாடகத்தில் தமிழ்பண்டிதர் பாத்திரமாக தோன்றி ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

இன்றும் தொடர்ந்தும் எழுதியும், கலைத்துறையிலும், அரசுபணியிலும் இயங்கிக்கொண்டிருக்கிறார். இப்படி இளமையுடன் கடமை புரியும் உடுவைக்கு 60 வயதாகிவிட்டது என்றால் யார் தான் நம்புவார்கள். தொடர்ந்து கடமையிலும் இலக்கிய பணியிலும் செயற்பட்டு அவரின் பணி தொடரட்டும்.

வீரகேசரி (வாரமலர்)
15-07-2007

வீரகேசரிக்கு 77 வயசு!!

இலங்கையின் மிகப் பெரிய தமிழ்ப் பத்திரிகை நிறுவனமான வீரகேசரியின் 77வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம் பெற்ற. வீரகேசரி பவள விழா சிறுகதைக் களஞ்சிய நூல் வெளியீடும் பவள விழா சிறுகதைக் போட்டியளாருக்கான பரிசளிப்பு விழாவும் இடம் பெற்றது.

கொழும்பு குளோபல் டவர்ஸ் கோட்டலில் 19-08-2007 அன்று மாலை 4மணிக்கு வீரகேசரி நிறுவனத்தின் உயர் அதிகாரிகளில் ஒருவரான திரு.அலெக்ஸ்சாண்டர் தலைமையில் நிகழ்வுகள் அரம்பமாகின.

மேற்படி நிகழ்விற்க்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.சி.வி.விக்கினேஸ்வரன் கொழும்பு பல்கலைக்கழக கலைப்பீடத்தின் தலைவர் பேராசிரியர் திரு. சந்திரசேகரம் எழுத்தாளர் தெளிவத்தை யோசப், ஆகியோயர் பிரதம விருந்தினராகவும், சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டார்கள். இதனை விடக் குறிப்பிட்டு கூடிய வகையில் பல எழுத்தாளார்களும், இலங்கையில் இருந்து போட்டி போட்டு வெளி வருகின்ற பத்திரிகைகளின் ஆசிரியர்கள் இவ் விழாவில் கலந்து சிறப்பித்தது விழாவின் விசேட அம்சமாகும்.

இவ் நூல் மொத்தம் 25 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளது. இன் நூலினை வீரகேசரி வார மலரின் ஆசிரியர் திரு.வி.தேவராஜ் தொகுத்துள்ளார்.

பவள விழா சிறுகதை போட்டிக்கு. 1000 மேற்பட்ட சிறுகதைகள் வந்தாகவும் கூடுதலான சிறுகதைகள் இளம் படைப்பாளிகளுடையது. என மேற்படி நிறுவனத்தின் நிறுவக இயக்குனர் திரு.குமார் நடேசன் நூல் குறிப்பிட்டுள்ளார்.

இவ் சிறுகதைகளை எழுதியுள்ளவர்கள் பல் வேறுபட்ட தளங்களில் இருந்து எழுதியிருப்பது கதைகளை வாசிக்கும் போது உணர முடிகின்றது.

இந்த நூலின் தொகுப்பாசிரியர் தனது தொகுப்புரையில் இப்படி எழுதி செல்லுகின்றார்.

ஊடகம் ஒன்றின் பிரதான பணிகள். வாசகர்களுக்கு செய்திகளை அளித்தல், கருத்துருவாக்கல், அறிவுட்டல், களிப்புட்டல் என்பவையாகும். சில தசாப்தங்களின் முன்பு வரை கலையும் இலக்கியமும் களிப்புட்டும் பொழுது போக்கு. எதிர் கால சந்ததினருக்கான அறிவுட்டல் அம்சங்களே என்ற நிலமை மாறி அவை சமுதயத்தின் மேம்ப்பாட்டுக்கான சாதனங்கள் என்ற கருத்து இப்போது நிலை பெற்று விட்டது. இலங்கையில் கலை இலக்கிய வளர்ச்சிக்கென தனியான சஞ்சிகை வெளியீடுகளோ நிலையாக வெளி வரததால் கலையும் இலக்கியத்தையும் ஊக்குவித்து வளர்க்க வேண்டிய பொறுப்பில் வீரகேசரி பல காலமாக ஈடுபட்டு வருகின்றது. என அவர் தொடர்ந்து இவ்வாறு மேலும் எழுதி செல்லுகின்றார்.

ஆசிரியர் குறிப்பிட்டது போல இன்று வீரகேசரி தனது இலக்கிய படைப்புகளை பரந்து விரித்துள்ளது. உதாரணமாக என்ற பத்திரிகையையும் இளம் உள்ளங்களுக்கா மெட்ரோன் என்ற பத்திரிகையும் தனது இளை பத்திரிகையாக நடாத்தி வருகின்றது. மேற்படி போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை அசூமத் எழுதிய நிலத்தாய் என்ற கதையாகும்.

இந்த பவள விழா சிறுகதை போட்டியில் முதல் 3இடத்தையும் பெற்ற கதைகள் இளம் எழுத்தளர்களால் எழுதப்பட்ட சிறுகதைகள் என்பதும் இளம் எழுத்தளர்களை கௌரவம் செய்ததும் விசேட அம்சமாகும்.

டுபாயில் பன்னி என்கிறார்கள்

டுபாய்க்கு நான் வேலைக்காக வந்து இறங்கிய முதல் நாள் நடந்த சம்பவம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

மத்திய கிழக்கில் வேலை பார்ப்பதற்காக நான் இலங்கையிலிருந்து புறப்பட்டு கட்டார் சென்று அங்கிருந்து மற்றொரு விமானத்தில் டுபாய் சென்றடைந்தேன். அங்கு நான் மற்றொரு விமானத்தில டுபாய் சென்றடைந்தேன். அங்கு நான் வேலைபார்க்கும் கம்பெனிக்கு என்னை அழைத்துச் செல்வதற்காக ஒருவர் வந்திருந்தார். விமான நிலையத்தில் நான் டுபாயில் தங்கி வேலை செய்வதற்கான சகல விடயங்களையும் முடித்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறினேன்.

என்னை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்திருந்தவர் இலங்கையின் நிலைமைகள் பற்றிக் கேட்டுக்கொண்டே வந்தார். நானும் எமது நாட்டு நிலைமைகளை கூறிக்கொணடே வந்தேன். திடீரென அவர் என்னிடம் கேட்டார் “என்ன பன்னி” என்று எனக்கு கோபம் வந்து விட்டது. என்னைப் பார்த்து பன்றி என்று கூறி விட்டாரென்று நான் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு சிரித்துவிட்டு மௌனமாக இருந்தேன் எமது பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. அரைமணி நேரம் கழித்து மீண்டும் அவர் என்னிடம் “என்ன பன்னி” என்று கேட்டார். எனக்குக் கோபம் எல்லையைக் கடந்து விடவே, அழகான யாழ்ப்பாண தமிழில் நன்றாக பேசிவிட்டேன். கம்பெனிக்குச் செல்லும் வரை அவர் ஒன்றும் பேசவில்லை.

கம்பெனிக்குச் சென்று முதல் வேலையாக எனது இலங்கை நண்பன் நிமலனிடம் நடந்த விடயத்தைக் கூறினேன். நான் கூறியவற்றைக் கேட்ட எனது நண்பன் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினான். எனக்கு இன்னும் கோபம் வரவே அவனையும் பேச ஆரம்பித்தேன். நீயும் என்னைப் பன்றி என்று சொல்லும் அர்த்தத்தோடா சிரிக்கிறாய் எனக் கேட்டேன். அதற்கு அவன் “நீ இலங்கை என்ன வேலை செய்தாய்?” என்பதைத் தான் அவர் உன்னிடம் “என்ன பன்னி” எனக் கேட்டார். நீ அவர் உன்னை “பன்றி” என்று சொல்லுகின்றார் என நினைத்து அவசரப்பட்டு திட்டி விட்டாயே என்றான்.

"இலங்கையில் இருக்கிறம்".


இலங்கையில் இருந்து இளையதம்பி தயானந்தாவை ஆசிரியராக கொண்டு இருக்கிறம் என்னும் பெயரில் இருமாத இதழ் ஒன்று வெளிவரத் தொடங்கி உள்ளது.

இலங்கையில் ஜனரஞ்ச இதழ்கள், சிறு சஞ்சிகைகள், பத்திரிகைகள் என வருவது அவை சில பிரசுரங்களுடன் நின்று விடுவது ஒரு சாபக்கேடு. மிகப் பெரிய பத்திரிகை நிறுவனமான வீரகேசரி கூட, 70களில் வெளியிட்டு வந்த வீரகேசரி மாதாந்த நாவலை கூட நிறுத்தி விட்டு இருந்தது இதற்கு மிக சிறந்த உதாரணம்.

எனினும் இருக்கிறம் சற்று நம்பிக்கையோடு வெளி வருவது போல் தெரிகின்றது. இளையதம்பி தயானந்தா இவ்வாறான சில பிரசுரங்களுடன் நின்று விடுவது குறித்து தனது இரண்டாவது இதழில் குறிப்பிட்டு இருப்பது அதற்கான அவரது தயார் படுத்தலை குறிக்கிறது.

விற்பனையை அதிகரிப்பதற்கு முதல் பிரசுரத்தில் “சிவாஜி” ரஜியினின் படத்தையும், இரண்டாவது பிரசுரத்தில் ஐஸ்வர்யா ராயின் படத்தை போடுவதை தவிர வேறு வழிகள் இல்லை என்பதை உணர்ந்திருக்கின்கிறார்.

எனினும் ஆக்கங்களில் சோரம் போகவில்லை. முதல் இதழ் கைவசம் இல்லாத காரணத்தினால் இரண்டாவது இதழில் வந்தவற்றை குறிப்பிடுகின்றேன். த.ஜெயசீலன், கவிஞர் செ.குணரத்தினம், தி.திருக்குமரன் ஆகியோரின் கவிதைகளும். கிண்ணியா அமீர் அலி, சரவணன், அமிர்தகழியான், ஆகியோரின் சிறுகதைளும், கே.எஸ். பாலச்சந்திரனின் வானொலி கால நினைவுகள், பனையடிப்பக்கம், சோக்கெல்லோ சண்முகத்தின் பட்சமுள்ள ஆச்சிக்கு என்பன தொடராக வருகின்றன. பசீனா சலீம், பிரபா ஆகியோரின் கட்டுரைகளும், ஐஸ்வர்யா ராய் நடித்த provoked திரைப்படம் பற்றிய பார்வையும், ஏராளம் துணுக்களும் வந்திருக்கின்றது.

பக்க வடிவமையிலும் அசத்தி இருக்கின்றார்கள். அனைத்தும் வர்ணபக்கங்களில் வந்திருக்கிறது.அறிமுக விலை 40 இலங்கை ரூபாய்கள்.

இரண்டாவது இதழில் சக பதிவரான தமிழ்நதியின் வாசகர் கடிதமும் வந்திருக்கிறது.

மேலதிக விபரங்கள்

ஆசிரியர்
இளையதம்பி தயானந்தா

நிர்வாக ஆசிரியர்
மனோ ராஜசிங்கம்

ஆசிரியர் குழு
எஸ்.ரஞ்சகுமார்
சாந்தி சச்சிதானந்தம்
அப்துர் ரகுமான்
வ.சிவஜோதி

தொடர்புக்கான முகவரி
3டொரிங்டன் அவனியூ
கொழும்பு-07 .

தொலைபேசி
0094602150836
0094112506272

தொலைநகல்
0094112585190

மின்னஞ்சல்
irukkiram@gmail.com

அறிமுகம்

வணக்கம் வலை உலகின் வெளியே நின்று வாசிப்பை மட்டும் மேற்கொண்டு வந்த நான் இப்போது இந்த பெரும் ஜோதியில் ஐக்கியமாகி விடலாம் என புறப்பட்டுள்ளேன்.
தாசன் எனப்படும் நான் பிறந்தது இலங்கையில் . தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணிபுரிகின்றேன். இந்த பெரும் ஜோதியில் உள்ள பின்நவீனத்துவர்களுடன் ஒப்புடன் நான் ஒரு சாதாரணன். அங்கங்கே சில கட்டுரைகளும் கதைகளும் வீரகேசரி, சுடரொளி போன்ற பத்திரிகைளில் எழுதியுள்ளேன்.
அடி முடி அறியா அரும்பெரும் ஜோதியாய் தங்களை வளர்த்துள்ள பதிவர்கள், பின்நவீனத்துவ பிதாமகர்கள், கும்மி கும்மி மறுப்பு பதிவர்கள் அனைவரும் என்னை வரவேற்பீர்கள் என நம்புகின்றேன்.