அறுபதுகளில் ஆரம்பித்து அறுபதைத்தாண்டும் தில்லை

இலங்கை கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரும் எழுத்தாளருமான உடுவை எஸ். தில்லைநடராஜா தனது 60 வது வயதினை பூர்த்தி செய்துள்ளார்.

07.07.1947 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வடமாராட்சியில் உள்ள உடுப்பிட்டி என்னும் கிராமத்தில் திரு.திருமதி சிங்கரம்பிள்ளை இராஜாம்மாள் தம்பதியினர்க்கு மூத்த புதல்வனாக பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை வடமாராட்சியில் புகழ்பெற்ற பாடசாலைகளின் ஒன்றான உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியிலும், உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கற்றார்.

சிறுவயதில் இருந்து இவர் கல்வியிலும் இலக்கியத் துறையிலும் ஈடுபாடு கொண்டு செயற்பட்டு வந்தார். சிறுவயதில் பேச்சு போட்டிப் ,கட்டுரை போட்டி என்பனவற்றில் பங்குபற்றி பல பரிசுகளை பெற்றுள்ளார். பாடசாலை மாணவனாக இருக்கிற காலத்தில் 14 வயதில் “மாணவன்” என்ற சஞ்சிகையை அச்சிட்டு அதன் ஆசிரிராக இருந்தார். எஸ்.ரி.ராஜன் என்ற புனைப்பெயருடன் அந்த சஞ்சிகையை நடாத்தி வந்தார்.

1967 ஆம் ஆண்டு எழுதுனர் பரீட்சையில் சித்தியடைந்து, அரச சேவையில் நுழைந்தார். முதல் சேவையை எழுதுனராக கொழும்பு பொலிஸ் தலைமைக் காரியலத்தில் தனது பணியை ஆரம்பித்தார். பின்னர் நுவரெலியா, கல்கிசை , கொழும்பு போன்ற இடங்களில் கடமையாற்றினார்.

1978 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவை பரீட்சை மூலம் முதல்முதல் கூட்டுறவு திணைக்களத்தில் உதவி ஆணையாளராக வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள பல மாவட்டங்களில் கடமையாற்றினார்.

1989 இல் வடக்கு கிழக்கு மாகாண கடற்றொழில் பணிப்பாளராகவும், 1992 தொடக்கம் 1994 ஆண்டுவரை வவுனியா அரச அதிபராகவும், 1995 -1997 ஆம் ஆண்டு வரை கிளிநொச்சி அரச அதிபராகவும், 1998 – 1999 வரை இந்து சமய திணைக்கள பணிப்பாளராகவும், 1999 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகவும் நியமனம் பெற்று இன்று வரை பணியாற்றி வருகின்றார்.

1993 ஆம் ஆண்டு பகுதியில் வவுனியா அரச அதிபராக கடமையாற்றிய போதும் கிளிநொச்சி யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டார். அந்த வேளையில் அவரை பலர் தடுத்தனர். அங்கு செல்ல வேண்டாம் என்று. எமது மக்களுக்காகவே இப்பணியை மேற்கொள்ளுகின்றோம். இதுவும் மக்களுக்காகவே செல்லுகின்றேன் என கூறி சென்று நிலைமைகளை கவனித்து அங்கு உள்ள மக்களின் அவல நிலைமைகளை ஊடகங்களில் கொண்டு வந்த முதல் தர அரச உத்தியோகத்தர் ஆவார்.

1995 ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திரு.பொன்னம்பலம் யாழ்ப்பாண அரச அதிபராக கடமையேற்றதை தொடர்ந்து பலரின் வேண்டுகோளின் படி கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக பதவியேற்றார். இவர் கிளிநொச்சி மாவட்டத்தில் செய்த பயன்மிகு வேலைத்திட்டங்கள் பல. எந்த நேரமும் மக்கள் அவரை சந்திக்கவும் ஒழுங்கு செய்திருந்தார்.

அவரின் உத்தியோகபூர்வ விடுதியிலும் சந்திப்பு மேற்கொள்ளவும் ஒழுங்கு செய்திருந்தார். இந்த வேளையில் யாழ்ப்பாண இடம்பெயர்வு இடம்பெற்றது. இந்நேரத்திலேயே இரவு பகல் என்று பாராது மக்களுக்கான வேலைத்திட்டத்ததை மேற்கொண்டார்.

ஒரு சமயம் அவரை சந்திப்பதற்கு அவரின் அலுவலகத்திற்கு சென்று இருந்த போது கிளாலி கடற்கரைக்கு சென்று விட்டதாக செய்தி கிடைத்தது. அவரின் நாங்கள் அவசியம் சந்திக்க வேண்டிய நிலைமை இருந்ததால் கிளாலிக்கே சென்று இருந்தோம்.

அங்கு அவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகின்ற இடம்பெயர்ந்தவர்களை படகில் இருந்து வெளியேறுவதற்கு உதவிக்கொண்டு இருந்தார். கடற்கரையில் நின்று கொண்டே அங்கு வந்து சேர்ந்தவர்களை அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். கிளிநொச்சியில் இருந்து தகவல் பெறக்கூடிய வசதியோ தகவல் அனுப்ப கூடிய வசதியோ இல்லாத வேளையில் கூட, இவ் இடம்பெயர்வின் அவலங்கள் உலக ஊடகங்களின் பிரதிபலிக்க காரணமாய் இருந்தார்.

அரச அதிபராக இருந்த போதும் சில சமயங்களில், சைக்கிளிலேயே அவரின் வேலைத்திட்டம் நகர்ந்தது. சைக்கிளில் சென்று மக்களின் சேவையை செய்தார். அந்த மாவட்ட மக்களின் அன்பை பெற்றவர் தில்லைநடராஜா. இதனை தொடர்ந்து கிளிநொச்சி இடப்பெயர்வு இடம்பெற்றது. இந்த வேளையில் மயிரிழையில் உயிர்தப்பினார்

தில்லைநடராஜா. கிளிநொச்சி நகரில் இருந்த மக்கள் இடம்பெயர்ந்து கொண்டு இருந்த வேளை அவர்களை கவனிக்கும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.

ஸ்கந்தபுரத்தில் இடம்பெயர்ந்து கிளிநொச்சி மாவட்ட அலுவலகம் இயங்கியது. இந்த அலுவலகம் ஒரு மரத்தின் கிழேயே இயங்கியது. அப்படி இருந்த போதும் வேலைகள் வேகமாய் நகர வைத்தார் இவர்.

14 வயதில் இலக்கிய பணியில் ஈடுபட தொடங்கினார். அப்போது சிறுவர்களின் மனதில் இடம்பிடித்த “சுதந்திரன்” வார இதழில் “மந்திரக்கண்ணாடி” என்ற சிறுவர் தொடர்கதை எழுதி “மந்திரக்கதை மருமகன்” என்று பத்திரிகை ஆசிரியரின் பாராட்டை பெற்றார். பின்னர் இவர் வவுனியா அரச அதிபராக இருந்த வேளையில் மந்திரக்கண்ணாடி நூலையும் கடற்கன்னி என்ற இன்னொரு இவரது சிறுவர் கதை நூலையும் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் அபிவிருத்திக்காக வெளியிட்டார்.

இவரது முதலாவது சிறுகதை தொகுதியான “நிர்வாணம்” 1992 ஆம் ஆண்டு இந்தியாவில் லில்லி தேவசிகாமணி இலக்கிய பரிசு திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு பரிசிற்கும் பாராட்டுக்கும் உரியவரானார். இதனை தொடர்ந்து “அப்பா” என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்த நூலை வாசித்த முன்னால் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் வாழ்த்து செய்தி அனுப்பினார்.

வடக்கு போர்க்கால சூழலை படம் பிடித்து காட்டும் “நம்பிக்கையுடன் நிம்மதியை நாடும் யாழ்ப்பாணம்” என்ற நூல் இவரது சமூக அக்கறைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். “கல்யாணம் முடித்துப் பார்” என்ற நகைச்சுவை சிறுகதை நூல் இலக்கியத்தில் இவரின் பல்பரிமாண தோற்றத்திற்கு ஒரு சான்றாகும்.

நாடகத்துறையிலும் புகழ்பெற்றவர்களான கே.எஸ் பாலச்சந்திரன், எஸ். எஸ் கணேசபிள்ளை ஆகியோருடன் பல நாடகங்களை நடித்துள்ளார். “அசட்டு மாப்பிள்ளை”நாடகத்தில் தமிழ்பண்டிதர் பாத்திரமாக தோன்றி ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

இன்றும் தொடர்ந்தும் எழுதியும், கலைத்துறையிலும், அரசுபணியிலும் இயங்கிக்கொண்டிருக்கிறார். இப்படி இளமையுடன் கடமை புரியும் உடுவைக்கு 60 வயதாகிவிட்டது என்றால் யார் தான் நம்புவார்கள். தொடர்ந்து கடமையிலும் இலக்கிய பணியிலும் செயற்பட்டு அவரின் பணி தொடரட்டும்.

வீரகேசரி (வாரமலர்)
15-07-2007

4 comments:

said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள், அவர் இப்போது வலையுலகிற்கும் வந்தது எமக்கெல்லாம் பெருமையாகவும், சிறப்பாகவும் உள்ளது.

said...

நன்றி பிரபா. நீங்கள் எம்மை எல்லாம் உற்சாகபடுத்தி வருவது மிக்க மகிழச்சியாக இருக்கின்றது.

said...

தில்லை ஐயாவுக்கு எனது பி.நா வாழ்த்துக்கள்.

அவரின் சில பதிவுகளைப் படித்து இரசித்திருக்கிறேன்.

இப்படி அனுபவம் உள்ளவர்கள் இங்கே எழுதுவது கண்டு மிக்க மகிழ்ச்சி.

said...

நன்றி வெற்றி.

உங்களின் வாழ்த்து உரியவர்ருக்கு சேர்த்துள்ளது.