கனவு காணும் வாழ்க்கையா?
மிகுந்த மகிழ்ச்சியில்
ஊர் அடைய.........

சின்னப்பு அண்ணையின்
வயல் பரிதாபமாக வரவேற்கின்றது..........

பெரியயப்பர் பெரியபுராணம்
படிக்கும் கொட்டகை
வல்லூறின் எச்சத்திற்க்கு இலக்காகி


நான் தவழ்ந்த வீடு
தாங்க முடியாத வேதனை.

கொஞ்சம் நின்று பார்க்கின்றேன்!

எமக்கு மீண்டும் வசந்தம்
வருமா... என்று?

எத்தனை கனவுகள்....

எமக்கு வாழ்க்கை வழமையாகி விட்டது.

நாம் இன்று கனவுகள்
சுமக்கும் தேசங்களாய்..........

சவ வண்டி


இப்போது எல்லாம் காலத்திற்கு காலம் எல்ல விடயத்திலும் மாற்றம் காணப்படுகின்றது. எனக்கு நினைவு தெரித்த நாளில் இருந்து. இறந்தவர்களை இறுதியாக தகனம் செய்ய எடுத்து செல்லும் போது பல வகையான முறையில் உடலை எடுத்து செல்வார்கள்.

தென்னை ஒலையை பின்னி அதனை அலங்கரித்து. அதில் உடலை வைத்து. தோல்களில் சுமந்து சென்று தகனம் செய்தார்கள். பின்னர் கொஞ்ச காலங்கள் செல்ல சவ வண்டியின் பழக்கம் அதிகரிக்க தொடக்கின.

ஆனால் இப்போது நிலை மாறி விட்டது. தங்களுக்கு விரும்பிய வாகணத்தில் உடலை எடுத்து செல்லுகின்றார்கள். எப்படி இருப்பினும் கிராமங்களில் சவ வண்டி பாவனை இப்போதும் உண்டு.


அண்மையில் எனது கிராமத்திற்க்கு உறவினர் ஒருவரின் மரண வீட்டுக்கு சென்ற போது.

எனது புகைப்பட கருவிக்குள் சிக்கிக் கொண்டது. அந்த புகைப் படத்தை நீங்கள் பார்க்கலாம்.

வடபுல நாட்டார் வழக்கு(சிறுகுறிப்பு)

அருகிப் போய்க்கொண்டிருக்கும் எமது நாட்டின் பாரம் பரிய நாட்டார் வழக்குகளுக்கு உயர் கொடுக்கும் வகையில் எழுத்தாளார் வல்வை ந.அனந்தராசா எழுதிய ‘வடபுல நாட்டார் வழக்கு’என்னும் நூலிலை அண்மையில் வாசித்தேன்.

சுமார் 30 வருடங்களுக்கு முன் ஆங்காங்கே ஒலித்துத்துக் கொண்டிருந்த. தாலாட்டுப் பாடல்கள், இளம்பெண்களின் கும்மிபப் பாடல்கள் , ஊஞ்சல் பாடல்கள், பாட்டிமாரின் விடுகதைகள், பழமொழிகள் என்பன. கேட்பவர்களின் சிந்தனைகளையும், சொல்லாட்சியையும் வளர்ப்பதில் எவ்வளவு தூரம் பங்கெடுத்துள்ளன என்பதை நினைக்கின்ற போதே எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றது.

அன்றைய நிலை மாறி இன்று முற்று முழுதாக எமது நாட்டார் வழக்குகள் இல்லாமல் போய் விடுமோ? என்ற அச்சம் தோன்றிய வேளையில் இந்த நூல் வெளி வந்து இருக்கின்றது. மகிழ்ச்சிக்குரிய விடயம்.

நாட்டார்பாடல்களில் பிரசவம்,தாலாட்டு.பூப்புனிதநீராட்டு விழா என ஒவ்வொரு பாட்டுக்கள் அது மட்டுமா? காதலர்கள் தங்களுக்கிடையே சந்திப்பை வைத்துக் கொள்வதற்க்கும் பாடல். இப்படியாக நூலாசிரியர் ஒவ்வொரு விடயத்திற்க்கும் சிறந்த விளக்கம் கொடுத்துள்ளார்.

இலங்கை புத்தகத் திருவிழா - “நானும் நாலு புத்தகங்களும்”

கொழும்பில் இப்போது எல்லாம் வாரா வாரம் ஏதோ ஒரு கலை இலக்கிய நிகழ்வுகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றது. ஆனால் அதில் எத்தனை தேறுபவை என்று காலம்தான் சொல்லும்.

இந்த வாரம் இலக்கிய ஆர்வலர்களை எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கி இருக்கும் நிகழ்வு புத்தக திருவிழா எனலாம்.

நேற்று எப்படியும் புத்தக திருவிழாவிற்க்கு போய் விட வேண்டும் என யோசித்த போதும். மழையும் கூடுதலாக பெய்து கொண்டு இருந்ததால் கைவிட்டுவிட்டால், இன்றைக்கும் மழை அப்படியே தான் இருந்தது. நல்ல விசயங்கள் நடைபெறுகின்ற போது மழை பெய்யும் என்று படித்த ஞாபகம். உண்மையாய் இருக்குமோ என்று எண்ணத்தோன்றியது அப்போது.

அப்படி இப்படி என்று இன்றைக்கும் புத்தகக் கண்காட்சிக்கு புறப்பட இரவு 6 மணியாகி விட்டிருந்தது.

நாங்கள் நுழைந்தது பண்டார நாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பக்கவாடாக இருக்கும் சிறிமாவோ ஞாபகார்ந்த மண்டபத்தின் வாயில் வழியாக.

ஏராளமானனோர் நிரம்பி வழிந்தாலும் பண்டார நாயக்கா சர்வதேச மண்டபத்தின் ஆடம்பரம் அதனை தூக்கி சாப்பிட்டு விட்டிருந்தது. ஒரு புத்தக கண்காட்சி போல் இல்லாமல் ஆடம்பர விடுதி ஒன்றில் நடக்கும் விருந்துபாரத்தின் ஆடம்பரம் அங்கே இருந்தது. ஆனால் நெரிசல், சத்தம் , வியர்வை , எதுவுமே இல்லாத இடம். சிறிமாவோ ஞாபகார்ந்த மண்டபத்தின் முன்னால் போடபட்டிருந்த தற்காலிக கொட்டகைகளுக்குள் ஏராளமான விற்பனைக்கூடங்கள் இருந்தாலும் சேமமடு புத்தகசாலை மட்டும் தான் அதற்குள் தமிழ் விற்பனைக் கூடம்.

சேமமடு விற்பனைக் கூடத்திற்குள்ளே நுழையும் போதே லேனா தமிழ்வாணன் கறுப்புக் கண்ணாடியுடன் சிரித்துக்கொண்டிருக்கும் புத்தகம் ஒன்றை முன்னால் வைத்திருந்ததை கண்டேன். அனேகமான இலங்கை நூல்கள் இருந்தன என்று சொல்வதைக் காட்டிலும் அங்கு இருந்தவற்றில் அனேமானவை இலங்கை நூல்கள். தமிழ் மண் பதிப்பகத்தின் நூல்கள் பலவும் இருந்தன. அவை அடுக்கப்பட்டிருந்த விதம் காரணமாக எல்லாவற்றையும் பார்க்கமுடியவில்லை. ரஞ்சகுமாரின் “மோகவாசல்” மீரா பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டு அங்கு இருந்தது. மோகவாசலை ஒரு நைந்து போன புத்தகமாக வாசித்த நினைவு. ஆனால் அங்கு ஏதுவுமே வாங்கமால் சிறிமாவோ ஞாபகார்ந்த மண்டபத்திற்குள் நுழைந்தால் அங்கு அது முற்றிலும் குளிரூட்டப்பட்டிருந்தது. இந்த குளிரூட்டல் காசு எல்லாவற்றையும் புத்தகத்தில் சேர்ந்துக் கொள்வார்களோ என பயந்து கொள்ள வேண்டியிருந்தது.

அங்கிருந்த தமிழ் விற்பனைக் கூடங்களான ஜெயா மற்றும் பூபாலசிங்கம் என்பனவற்றிலுள் ஜெயா தனியே பாடசாலை மாணவர்களுக்கான நூல்களை மாத்திரம் கொண்டிருந்தமையினால் நேராக பூபாலசிங்கம் புத்தகசாலையின் விற்பனைக் கூடத்திற்கு நுழைந்தேன். அவர்களும் தாங்கள் தான் இலங்கையின் மிகப்பெரிய தமிழ்ப் புத்தகக் கடை என்பதை காட்டுவது போல புத்தகங்களை கட்டுக்கட்டாக , ஒன்றன் மேல் ஒன்றாக வைத்திருந்தனர். எப்படி? என முடியும் பல புத்தகங்களும் விகடன் பதிப்பக நூல்களும் ஒழுங்காக அடுக்கி வைத்திருந்தனர். பா.விஜய்க்கும் வைரமுத்துவிற்கும் ஒரு கணிசமான இடத்தை ஒதுக்கி பார்ப்பதற்கு இலகுவாக அடுக்கி வைத்திருந்திருந்தனர். என் போதாத காலத்திற்கு நான் தேடும் புத்தகங்களை தான் முதல் சொன்ன மாதிரி ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்திருந்திருந்தனர். எனினும் ஒரு புத்தகத்தை அது என்ன தலைப்பு என்று பார்ப்பதற்கு குறைந்தது 15 புத்தகங்களையாவது தூக்க வேண்டியிருந்தது. என்னை போல் இன்னொரு விக்கிரமாதித்தியனும் விடாமல் கட்டுக்களை தூக்கி தூக்கி வைத்து கொண்டு இருந்தார். அவரிடம் நான் தேடும் சில புத்தகங்களின் பெயரை சொல்லி இதை கண்டனீங்களோ என்று கேட்க “நான் சும்மா ப்ரண்டோட வந்தனான் சும்மா பார்க்கிறன்” சொல்லிக் கொண்டே செல்பேசியை காதில் வைத்துக்கொண்டார். ஒரு பக்கத்தில் "year eleven science exercise book கொண்டு வந்தனீங்களே? என்று கேட்க ஆரம்பித்த பெண்மணி தான் மட்டும் அங்கு புத்தகம் வாங்க வந்தவர் போல ஊரை கூப்பிட தொடங்கினார். நானும் பொறுமையிழந்து அங்கங்கே சிணுங்கிக் கொண்டிருந்த விற்பனை பிரதிநிதி பெண்களில் ஒருவரை அழைத்து நான் தேடும் புத்தகங்கள் இதற்கு இருக்கா என கேட்டேன். அதற்கு அவர் அந்த புத்தக றாக்கையை பார்த்து தியானம் செய்து போட்டு சொன்னார். “அண்ணா நீங்கள் இங்க தேடுறதை விட வெள்ளவத்தை கடைக்கு வந்தியள் எண்டால் கட்டாயம் கிடைக்கும்” என்று. எடுத்த நான்கு புத்தகங்களையும் கொண்டு வெளியே வந்தால் பண்டார நாயக்கா மண்டபத்திற்குள்ளும் ஏறி இறங்கினோம். வெளியே வந்தால் ஒரு இடத்தில் சிறிய கூட்டம். எட்டிப்பார்த்தால் உள்ளே ஒரு இசை நிகழ்ச்சி நடக்கிறது. அந்த இடத்தை நாங்கள் ஏற்கனவே கடந்து சென்றிருந்தாலும் முதலில் நாங்கள் அதை கவனிக்கவில்லை. மெல்லிய இசை பரவ ஒரு இசைநிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது கண்காட்சிக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தாத படி.

ஏறத்தாள 400 விற்பனைக் கூடங்களில் ஆக நான்கு விற்பனைக் கூடங்கள்தான் தமிழ் என்றால் ஆங்கில சில தவிர மிகுதி அனைத்தும் சிங்கள விற்பனைக் கூடங்களே. சிங்கள விற்பனைக் கூடங்கள் நிறைந்திருந்தது போல வாங்குவதற்கு ஆக்களும் நிறைந்திருந்தனர். ஆக தமிழ் விற்பனைக் கூடங்கள் ஈ ஓட்டுவதற்கும் காரணம் என்ன? கொழும்பில் தமிழ் மக்கள் இல்லை என்பதா? அல்லது அவர்களுக்கு வாசிப்பு பழக்கம் மறந்து விட்டதா? தவிரவும் தமிழ் நூல் விற்பனையாளர்களும் தங்களின் தொழிலை professional ஆக செய்யாமல் ஏதோ சமூக சேவை செய்வது போன்று இருப்பதும் இதற்கு காரணமாய் இருக்கும் என நினைக்கின்றேன். உதாரணமாக அங்கிருந்த எம்.டி. குணசேன பதிப்பகத்திற்குள் நுழைந்த போது அங்கு சிங்கள புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்த விதம், ஒழுங்கு மிகவும் கவர்ச்சிகரமாய் இருந்தது. எம்.டி.குணசேனவின் தமிழ் வெளியீடுகள் குறித்து கேட்ட போது சிங்கள விற்பனைப்பிரதிநிதிகள் அந்த புத்தகத்தை தாங்கள் வாசித்தவர்கள் போல் கதைக்க தொடங்கினார்கள். இதுதான் தமிழ் புத்தக விற்பனைக் கூடங்கள் விட்ட பிழைகளில் ஒன்று.

என்னைப் பொறுத்தவரையில் பண்டார நாயக்கா மகாநாட்டு மண்டபம் ,சிறிமாவோ நினைவு மண்டபம் , அதற்கு முன் மெல்லிய இசை பரவ நடந்த சிங்கள இசை நிகழ்ச்சி, அங்கிருந்த மகி விற்பனைக் கூடத்தின் நூடில்ஸ், அதிகம் ஏன் பண்டார மண்டபத்தின் கழிப்பறை கூட நல்லாய் இருந்தது. புத்தக கண்காட்சிதான் சோபிக்கவில்லை.

வாங்கிய நான்கு புத்தகங்கள்.

உயிர்த்திருத்தல் - யூமா வாசுகி
வாழ்நிலம் - சுகுமாரன்
ஜே ஜே சில குறிப்புக்கள் - சுந்தர ராமசாமி
கோரைக் கிழங்கு தேடும் பெருவனக் கொழுவன் - எழில்வரதன்

மல்லிகை "தமிழச்சியும்" மெட்ரோ நியூஸ் "ஜெஸிலாவும்"

வலைப்பதிவாளர்களையும் வலைப்பதிவுகளையும் அறிமுகப்படுத்தும் படலங்களை இப்போது சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் தொடங்கியுள்ளன போலும். இலங்கையில் இருந்து கடந்த ஐம்பது வருடங்களாக வெளிவந்துகொண்டிருக்கும் மல்லிகையின் இந்த வருட ஒகஸ்ட் இதழில் “மின்வெளிதனிலே” என்னும் இணையத்தளங்ளை அறிமுகம் செய்யும் பக்கத்தில் தமிழச்சியின் வலைப்பதிவு பற்றிய அறிமுகம் வந்திருக்கின்றது. இந்த பக்கத்தினை எழுதுபவர் மேன்மகவி என்பவர். தமிழச்சி பற்றிய அறிமுகம், புகைப்படம் என்பனவற்றோடு வந்திருக்கும் இவ்வறிமுகம் தமிழச்சியின் வலைப்பதிவில் உள்ள பெரியாரின் கருத்துக்களை மொத்தமாக ஐந்து பக்கங்கள் வரை எழுதப்பட்டிருக்கின்றது.

தவிர அகர வரிசையில் தொடங்கும் சில வலைப்பதிவுகளையும் மல்லிகை வெளியிட்டு இருந்தது. அந்த மல்லிகை இதழ் கைவசம் இல்லாத காரணத்தினால் யாருடைய வலைப்பதிவுகள் பற்றி வந்திருந்தன என்று சரியாக சொல்ல முடியவில்லை. ஆனால் இன்றைய “மெட்ரோ நியூஸ்” பத்திரிகையில் ஜெஸிலாவின் வலைப்பதிவு பற்றிய அறிமுகம் வந்திருக்கின்றது. “மெட்ரோ நியூஸ்” என்பது இலங்கையின் மிகப்பெரிய பத்திரிகை நிறுவனமான வீரகேசரியின் நகரப்பதிப்பாகும். “மெட்ரோ நியூஸ்” இவ்வாறு வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் வேலையை நெடுநாளாக செய்து வருகின்றதா? அல்லது இன்றுதான் தொடங்கியிருக்கின்றா என்று தெரியவில்லை. ஏன் என்றால் நான் இன்றுதான் “மெட்ரோ நியூஸை” முதன் முதலில் எடுத்திருக்கின்றேன

அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழத்தமிழர் ஒருவருடன் நேர் காணல்


இலங்கையில் இருந்து பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பிடும் படியாக 1983ம் ஆண்டின் பின்னரான இனக்கலவரத்தை தொடர்ந்து அவுஸ்திரேலியா நாட்டிற்கும் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து சென்றார்கள்.இவர்கள் அங்கு சென்று பல வருடங்கள் ஆகியும் தமிழர்களுடைய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் விட்டு விடாமல் பேணிப் பாதுகாத்து வருகின்றார்கள்.

இவ் விடயம் தொடர்பாகவும் அவுஸ்திரேலியாவில் இருக்கின்ற தமிழ் மக்களின் நிலைமைகளை அறிந்து கொள்ளவும் இலங்கைக்கு வந்த தமிழ் பிரமுகர் எஸ்.சற்குணலிங்கம்; அவர்களைச் சந்தித்த போது ஆரவாரத்திற்கு வழங்கிய செவ்வியினைத் தருகின்றேன்.

இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறந்த சற்குணலிங்கம் வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள பல மாவட்டங்களில் கூட்டுறவு திணைக்களத்தின் தலைமைப் பரிசோதகராக கடமை புரிந்து 1987ம் ஆண்டு முதல் இன்று வரை அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வருகின்றார்.
இவர் அஸ்வுரேலியாவில் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்ற ஈழத்தமிழ் சங்கம் மற்றும் அவுஸ்திரேலிய எழுத்தாளர் சங்கம் உட்பட பல தமிழ் அமைப்புக்களின் உறுப்பினராக இருந்து தம்மாலான பணிகளை ஆற்றி வருகின்றார்.

இவரிடம் நாம் கேட்ட கேள்விகளுக்கு அவர் வழங்கிய பதில்கள்

கேள்வி- நீங்கள் 1987ம் ஆண்டில் இருந்து இன்று வரை அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வருகின்றீர்கள். மீண்டும் நீண்ட வருடங்களுக்கு பின் தாயக மண்ணில் கால் பதித்திருக்கிறீர்கள் இதனை எவ்வாறு கருதுகிறீர்கள்?

பதில்- நான்1987 ஆண்டு இலங்கையில் ஏற்ப்பட்ட போர் சூழல் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்து சென்றேன். மீண்டும் நான் பிறந்த மண்ணில் கால் பதித்ததையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். போர் மேகம் அப்படியே இருந்தாலும் 19வருடங்களின் பின் நிறைய மாற்றங்களை காணக் கூடியதாக இருக்கின்றது.

கேள்வி-இலங்கையில் இருந்து தற்போது அவுஸ்ரேலியா நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற எமது தமிழ் மக்கள் எவ்வாறு இருக்கின்றார்கள்? எப்படி எமது கலாசாரம் இருக்கின்றது.

பதில்- அவுஸ்திரேலியா இலங்கையை போல் 250மடங்கு பெரிய நிலப்பைக் கொண்ட ஒரு கண்டமாகும் அங்கு. 1.சிட்னி 2.மல்பேன் 3.பிறிஸ்பேன் 4.கன்பரா 5.அடிலயிட் 6.பேத் 7. தஸ்மேலனியா 8.டாவின் என எட்டு பெரிய மாநிலங்கள் உள்ளன. அங்கு இருக்கின்ற தமிழ் மக்கள் மிகவும் சந்தோசமாக இருக்கின்றார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கின்றார்கள். சகலருக்கும் கல்வி வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலான தமிழ் மக்கள் உயர் தொழிலில் இருக்கின்றார்கள்.

மேலும் எமது நாட்டைப் போல் எமது தமிழ் மக்கள் தமது கலாசாரத்தைப் பேணும் விடயத்தில் அக்கறை உள்ளவர்களாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
தமிழ் மொழி கல்வி நடவடிக்கைகள் இலக்கிய விழாக்கள் நடன அரங்கேற்ற நிகழ்வுகள் கூடுதலாக நடைபெறுகின்றன. ஈழத்தமிழ்ச் சங்கம் 9தமிழ்ப்பாடசாலைகளை நடத்தி பிள்ளைகளுக்கு கருத்து தமிழ்க் கல்வியை ஊட்டுகின்றது.
இதே போன்று வேறு அமைப்புகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இவற்றிக்கு அவுஸ்திரேலியா அரசும் உதவி வருவது குறிப்பிடத்தகுந்தது.

கேள்வி- இங்கு வாழ்ந்து வருகின்ற பல முதியவர்கள்
அங்கு இருக்கின்ற பிள்ளைகளால் அவுஸ்திரேலியாவுக்கு அழைக்கப்பட்டு இருக்கின்றார்கள். அவர்களுக்கு அங்கு உள்ள அரசாங்கத்தால் எவ்வகையானஉதவிகள்வழங்கப்பட்டுகின்றது.

பதில்- முதியோர்கள் வீட்டில் எப்படி இருந்தாலும் அரச அமைப்பைப் பொறுத்த வரையில் அவர்கள் மூத்த பிரசைகள் என கருதப்படுகிறார்கள். முதியோர்களுக்கு வேறான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
அந்த அட்டை மூலம் அவர்களுக்கு குறைந்த செலவில் மருத்துவ வசதிகளையும் பெறவும் பிரயாணம் செய்யவும் முடியும் இதனை விட முதியோர்களுக்கு ஒய்வூதியமும் வழங்கப்பட்டு வருகின்றது.

கேள்வி- இலக்கிய பணிகள், சமூகப் பணிகள் எந்த வகையில் நடைபெற்றவருகின்றது.

பதில்- ஈழத்து தமிழ்ச்சங்கம் , தமிழக், கலாச்சார கழகம், என பல அமைப்புகள் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டேன். குறிப்பாக புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும் தமிழ் மொழியை மேம்படுத்தவும் பல நடவடிக்கைளை எடுத்து வருகினறன.
சிறுகதை, கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகின்றன. விழாக்களையும் நடத்துகின்றோம். தமிழ்ப் அறிஞர்களின் விழாக்களும் இதில் அடங்கும். நமது மக்கள் இவற்றில் எல்லாம் உற்சாகமாக கலந்து கொள்கிறார்கள்.

கேள்வி- மக்கள் எவ்வாறு எமது கலாசாரத்தையும் சமய வழிபாடுகளையும் பேணிக்காத்து வருகிறார்கள்

பதில்-35ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வருகின்றாரகள். பல இந்து ஆலயங்கள் நிறுவப்பட்டு தினசரி பூசை விசேட பூசைகள் திருவிழாக்கள் ஒழுங்காக நடைபெற்று வருகின்றன. மூன்று தமிழ் அமைப்புக்கள் மூலம் பாடசாலைகளில் சனி ஞாயிறு நாட்களில் தமிழ் வகுப்புகளை நடாத்தி வருகின்றனர்.

நானும் சைக்கிளும்


நான் இந்த முறை சைக்கிளை பற்றி எழுதலாம் என்று நினைக்கின்றேன். என்ன நான் சைக்கிளின் தயாரிப்பு பற்றி நான் எழுதவில்லை. இப்போது ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் மோட்டார் சைக்கிள் நிற்கின்றது.

சைக்கிள் என்றால் கடவுள் மாதிரி இருந்த காலமும் ஒன்று இருந்தது. நான் சின்ன பெடியனாய் இருக்கும் போது மாமா வீட்டுக்குள் ஓடும் சைக்கிள் வாங்கி தந்தார். அதே நேரம் பெரியம்மாவின் மகன் பிரகாஸ் அண்ணாவிடமும் ஒரு சின்ன சைக்கிள் இருந்தது. இரண்டு பேரும் தாத்தாவின் அரிசி ஆலையின் நெல் காய போடும் சீமேந்து மேடையில் இரண்டு சைக்கிள்களிலும் ஓடிய நினைவு.

பின்னர் இரண்டு பேரும் கொஞ்சம் வளர்த்த பின் எங்கள் சைக்கிள்கள் தம்பிமாருக்கு மாற்றப்பட்டது. மாற்றப்பட்டது என்றால் மாற்றி உறுதி பத்திரமும் வழங்கப்பட்டது என்று கூட சொல்லாம். ஏன் என்றால் தம்பிமார் எங்களை அந்த சைக்கிகளில் தொடக்கூட விடவில்லை. அதன் பின் அவர்கள் கூடிய நாட்கள் அந்த சைக்கிளில் ஓடியதாக தெரியவில்லை. அதற்கு பதிலாக அந்த சைக்கிள்களில் கூடிய நாட்கள் திருத்த வேலை தாங்களே செய்யத் தொடங்கினார். சில வேளையில் அதன் தாக்கம் தான் இப்போது ஒரு தம்பி கணணித் துறையிலும் , இன்னொருவன் தொழில் நுட்ப துறையிலும் தேர்ச்சிபெற்றவர்களாக விளங்க காரணம் என நினைக்கின்றேன். ஒரு முறை தம்பிமார் அண்ணா வைத்திருந்த சைக்கிளை எனது சைக்கிளில் கயிற்றினால் கட்டி இழுத்து சென்றார்கள். என்ன விசயம் என கேட்ட போது சைக்கிளின் இஞ்சின் பழுதாய் போய் விட்டதாக கூறினார்கள். நான் நினைக்கின்றேன் செல்வ மாமாவின் லொறி இஞ்சின் பழுதாய் போய் விட்டால் சுவேந்திர மாமாவின் உழவு இயந்திரத்தால் இழுத்து செல்வது வழக்கம். இதனை பார்த்து தான் அவர்கள் அப்படி செய்து இருக்க வேண்டும்.

சில வருடங்களின் பின் அந்த சைக்கிளில் இரண்டையும் காணவில்லை. அதன் நினைவாய் ஒரு போட்டோ மட்டுதான் இருக்கு. சாந்தி அக்காவின் பிறந்த நாளுக்கு நானும் அண்ணாவும் சைக்கிளில் இருந்து போட்டோ எடுத்தோம். அதுதான் இப்ப அதுகளுக்கு ஒரு நினைவுச் சின்னம். அந்த போட்டோவை எங்களின் விருப்பத்திற்க்கு எற்றபடி போட்டோ எடுத்த மனோ அண்ணாவிற்க்கு ஒரு ஓ...போடலாம் நீங்களும் ஓ...போடுங்கோ ஏன் இப்படி சொல்லுகின்றேன் என்றால் அந்த சமயத்தில் எடுத்த போட்டோ பெரிய விசயம்.

பின்னர் நாங்கள் வளர வளர பல சைக்கிள்கள் வீட்டிற்க்கு வந்து போன ஞாபகம். பின்னர் அப்பா ‘’சாளி’’ மோட்டார் சைக்கில் வைத்து இருந்ததாக நினைவு. விடியவேளையில் நான் எழும்பி முதல் வேளையாக ‘’சாளி’’ மோட்டார் சைக்கிளை துடைத்து. பின்னர் மோட்டார் சைக்கிளில் ஏறி எங்கட வீட்டு கேற்றடி மட்டும் ஓடி போட்டு கொண்டு வந்து கொடுக்கதான் அப்பா கந்தோருக்கு போவார். அதற்கு அம்மா பேச தொடங்கினால் அதற்கு நான் பல கதைகளை கூறுவேன். ‘’இஞ்சின் கீற் பண்ண வேணும் அது தான் மோட்டார் சைக்கிலை ஓடி போட்டு கொண்டு வந்தனான்” என்பது அதில் ஒன்று. அதற்கு ‘’வீட்டிலில் பொறுப்பான பையன்’’ என்ற பட்டமும் பெற்றேன். ஆனால் இப்போது அந்த ‘’பட்டம்’’ எனக்கு இருக்கின்றதா என்று தெரியவில்லை.

பின்னர் தம்பி சிவம் அண்ணாவின் மோட்டார் சைக்கிலில் ஒடி பழகி இப்போது யாமஹாவிலும் ஓடுகின்றான். அண்ணாவும் யாருக்கும் தெரியாமல் ‘’றைவிங்’’ பழகி பின்னர் இடம் பெயர்வு நேரம் வீட்டில் இருந்த பொருட்களையும் வீட்டில் நின்ற லொறியை எடுத்து கொண்டு வந்த பின்னர் எங்கள் மாமான்மார்கள் “சிறந்த ரைவர”; என்ற பெற்றார். அதன் பின்னர் எல்லோருக்கும் தெரிய கூடியதாக வாகனம் ஓட்டினார். அதைவிட மகாலிங்கம் தாத்தா தனது பிள்ளைகளிடம் டக்ரரை ஓட கொடுக்காமல் அண்ணாவிடமே கொடுத்தார்.

இப்படி எல்லா உறவுகளும் மோட்டார் சைக்கிள், கார் என ஓடிகொண்டு இருந்தார்கள். நான் ஒருநாள் அண்ணாவிடம் எனக்கும் ‘’றைவிங்’’ பழக்கி விடு என்றேன். ஓம் பழக்கிவிடுகின்றேன் என்று சொல்லி,சொல்லி கடைசியில் இப்ப லண்டனில் இருக்கிறான். ஆனால் மோட்டார் சைக்கில் மட்டும் ஓடுவதற்கு பழக்கி விட்டான். நான் கேட்டது பெரிய வாகனம் ஓட்டுவதற்கு. அதற்கு அவன் கால் வளர வேண்டும் என சொல்லி சொல்லி எமாத்தி போட்டான்.


எனது தம்பி தன்னுடைய சட்டைப் பையில் இருந்து அடிக்கடி தன்னுடைய ‘’றைவிங்’’ ‘’லைசன்சை’’ எடுத்து காட்டும் போது, எனது மனதுக்கு க~;டமாக இருக்கும். ஏன் என்றால் இந்த காலத்திலை வாகனம் ஓட்ட தெரிய விட்டாலும், கணணி இயக்க தெரியவிட்டாலும் “மக்கற்” இல்லையாம். இதனால் மாமாவிற்க்கு தெரியாமல் போய் றைவிங் ஸ்கூலில் சென்று விண்ணப்பம் செய்தபோது அங்கு இருந்தவரால் எனது விண்ணப்பம் திருப்பி தரப்பட்டது. காரணமாக “நீங்கள் இந்த மாவட்டமாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் பொலிஸ் பதிவு தேவை” என்றார்.

இரண்டு வருடத்திற்கு முன் தம்பி ‘’லைசன்ஸ்’’ எடுக்கும் போது ‘’றைவிங்’’ ஸ்கூல்கள் போட்டி போட்டு விண்ணப்பகளை எற்று கொண்டதும் தம்பி தனது இறுதி பயிற்சியை தலைநகரில் இருந்து பல மைல்களுக்கு அப்பால் உள்ள மாவட்டம் வரை கனரக வாகனத்தை ஓட்டி சென்று சிறந்த றைவர் என பெயர் பெற்றான்.


நான் சைக்கிளில் கதை கூறுவதாக கூறி இப்போது மோட்டார் சைக்கிள், வாகனம் எண்டு வந்திட்டன் மன்னிக்க வேண்டும் எல்லாம் “சின்ன சின்ன ஆசைதான்”.


வீட்டிலில் இரண்டு சைக்கில் மட்டும்தான் இருந்தது. அப்பாக்கு ஒரு சைக்கிள் மற்றது சைக்கிள் தங்கைச்சியினுடையது. தம்பி யாமஹாவிற்கு சொந்தக்காரன்.


அப்பா கந்தோர் என்டு ஓடி கொண்டு இருப்பார். தங்கைச்சியும் தம்பிக்கு நிகர் சைக்கிள்
தரமாட்டாள். ஒரு முறை அவளுக்கு தெரியாமல் சைக்கிளை பள்ளத்துக்குள் விட்டு உடைத்து பின்னர் அம்மாவிடம் பேச்சு வாங்கியதுடன் ஒரு வாரமாய் கதைக்கவும் இல்லை.


வெறும் சைக்கிளுக்கு கூட எங்கள் ஊரில் அந்தளவுக்கு மதிப்பு நம்பினால் நம்புங்கோ.


பின்னர் புதுக்குடியிருப்பிலை ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அந்த கடிதம் கொண்டு வந்த பியோன் அருந்தவலிங்கம் அண்ணாவிற்கும் ஒரு ஓ...போடலாம். ஏன் என்றால் நானும் சைக்கிள் வாங்குவன் என்ற கனவை நிஜமாக்கியது அந்த வேலை என்பதற்காக அப்படி சொன்னேன்.


அப்ப சம்பளம் எவ்வளவு என்று கேட்டாள் சிரிப்பியள். வெறும் 1500 ரூபாதான். ஆனால் இப்போது நல்ல சம்பளம் எடுக்கின்றேன். அப்போது அந்த நிறுவனம் எனக்கு பிடித்த படியினாலும், அதனால் எனக்கு பல நன்மையும் கிடைத்தது. நான் விரும்பி சென்ற துறைக்கு அந்த நிறுவனம் ஒரு வழிகாட்டியாகவும் அமைந்தது.

மூன்றாவது ஆள் பாவித்த சைக்கிலை 1000ரூபாவிற்கு வாங்கினேன். பிரேக் இல்லை. காலால் தான் பிரேக் பிடிக்க வேண்டும். சீற்றுக்குள் இருக்கும் கம்பி குண்டியில் குத்த குத்த ஓடி வேலைக்கு போவேன். நான் செய்த பாவம் எனக்கு வெளி வேலைதான் தந்தார்கள். இப்போது நான் செய்த வேலையை செய்யும் இன்னுமொருவருக்கு நிறுவனத்தால் மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. அது நிறுவனத்தின் வளர்ச்சியாக இருக்கலாம். அல்லது அவன் அதிஸ்கரனாய் இருக்க வேணும்.

போன கிழமைதான் அப்பா போனில் கதைக்கும் போது சொன்னார் இப்ப புதுசா ஒரு மோட்டார் சைக்கிள் வந்திருக்காம். பழைய மோட்டார் சைக்கிளை விற்று போட்டு புதுசா எடுக்க போறம். தங்கைச்சியும் புதுசா லேடிஸ் மோட்டார் சைக்கிளும் எடுக்க போறளாம்.

அப்பாவிடம் எனது அன்பான வேண்டுகோள். அந்த சைக்கிளுக்கு அடிக்கடி ஒயில் போட்டு துடைக்க சொல்லுகின்றேன். ஏன் என்டால் அதுவும் இல்லை என்றால் இந்த ராசனுக்கு நடராசாதான்.

வலைப்பதிவர்களே!! பரிசு தரக் கூப்பிடுறார் அப்பாவி

அப்பாவி தனது பிளாகில் “கமெண்ட் செய்யுங்கள், பரிசு வெல்லுங்கள்” என்ற போட்டியை ஆரம்பித்துள்ளார். இப்போட்டியில் பங்குபெற அவ்ரது இந்த பதிவுக்கு ஜஸ்ட் ஒரு மறுமொழி செய்தால் போதும்.

மேலும் விபரங்கள் அவரது பிளாகில்>>

இலங்கையில் இருந்து புதிய இணைய வானொலி

அண்மைக்காலமாக இலங்கையில் திடீரென கலை இலக்கிய செயற்பாடுகள் வேகம் பெற்றுள்ளது போன்று தெரிகின்றது. வலைபதிவில் ஏராளமானவர்கள் வந்து குவிகின்றார்கள். அடுத்தடுத்து சஞ்சிகைகள் வெளிவரத் தொடங்குகின்றன. மிகப்பெரிய பத்திரிகை நிறுவனங்கள் சில தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு இணைப்பு பத்திரிகைகளை அதிகமாக்குவதோடு, தமது இணையத் தளங்களையும் விரிபடுத்த தொடங்கி இருக்கின்றன. சக்தி தொலைக்காட்சியும் விஜய் ரிவீயின் பாணியில் நிகழ்ச்சிகளை ஆரம்பித்து பல லட்சங்களை பரிசுத் தொகையாக அறிவிக்கின்றனர். ( விஜய் ரிவீயின் ஜுனியர் சுப்பர் சிங்கர்ஸ், சின்மயி, ஹாரிஸ் ராகவேந்திரா, தினா, மாதங்கி என தமிழ்நாட்டு பிரபலங்களும் இவர்கள் தயவால் இங்கு வந்து போய் கொண்டு இருக்கின்றனர்) இவற்றுக்கும் மேலாக இப்போது புதிதாக ஒரு இணைய வானொலி ஒன்றும் ஆரம்பித்து பட்டிருக்கின்றது. இலங்கை தமிழோசை என்னும் பெயரில் என்னும் பெயரில் 24 நான்கு மணி நேரமும் http://www.strfm.com/ என்னும் இணைய முகவரியில் இயங்க ஆரம்பித்துள்ளது.

லண்டனிலும் , கனடாவிலும் இருந்து இதன் நிர்வாகம் மேற்கொள்ளப்படுவதாக அறியக்கிடக்கிறது. இதன் அங்குரார்ப்பண விழா 25-08-2007 அன்று இடம் பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இலங்கை கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரும் எழுத்தாளருமான உடுவை எஸ் தில்லை நடராஜா கலையகத்தை திறந்து வைத்ததோடு , அவ்வானொலியின் குறியீட்டு இசையை இயக்கி ஒலிபரப்பை தொடக்கி வைத்தார்.


இந்த நிகழ்விற்கு மூத்த அறிவிப்பாளரான ராஜேஸ்வரி சண்முகம் , இருக்கிறம் சஞ்சிகையின் ஆசிரியர் இளையதம்பி தயானாந்தா , நாடக ஜம்பவான் மரிக்கார் எஸ். ராம்தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டதை அவதானிக்க கூடியதாக இருந்தது. இலங்கை வானொலியில் இருந்து ஓய்வு பெற்ற பலரும் வந்திருந்து கூடியிருந்து தமது பழைய நினைவுகளை பகிர்ந்த படியிருந்தனர்.

மரிக்கார் எஸ். ராமதாஸ் (இவர்தான் இலங்கையின் 100 நாள் ஓடிய ஈழத்தமிழ் திரைப்படங்களான கோமாளி மற்றும் ஏமாளிகளின் சொந்தக்காரர்) தளர்ந்து போயிருந்த தனது குரலினால் இவர்கள் ஆங்கிலத்தையும் கலந்து அறிவிப்பு செய்து தமிழ்க்கொலை செய்யக் கூடாது என தனது உரையில் பல தடவைகள் குறிப்பிட்டதை அவதானிக்க கூடியதாயிருந்தது.

ஆச்சரியம் என்னவென்றால் ஏறத்தாள 25 அறிவிப்பாளர்களை பயிற்றுவித்து வைத்திருக்கின்றார்கள். பண்பலையில் ஒலிபரப்ப அரசின் அனுமதிபத்திரத்திற்கு விண்ணப்பித்து இருப்பதாக தெரியவருகின்றது. மிகவிரைவில் அது பண்பலையில் வரும் என்று வீரகேசரி, தினக்குரல் எல்லாமே சேர்ந்து சொல்கின்றன. ஆனால் என்னவென்றால் இப்போது அந்த இணையத்தளத்தில் அது ஒலிக்க காணோம். நான் நினைக்கின்றேன் ஏதாவது தொழிநுட்ப கோளாறாய் இருக்கலாம் என்று. சில நாட்களில் சரி வந்து விடலாம்.
இணைய முகவரி
http://www.strfm.com/


முகவரி
இலங்கை தமிழோசை
16-1 பரகும்பா வீதி
கொழும்பு
இலங்கை

தொலைபேசி
0094602172668

‘’இருக்கிறம்’’ இதழ் 3

‘’இருக்கிறம்’’ சஞ்சிகையின் 3வது இதழ் வெளியாகி விட்டது.
விஜய்யின் படத்தை அட்டைப்படமாக கொண்டு இது வெளிவந்து இருக்கின்றது.

வழமையான பல தொடர்களான பனையடிப்பக்கம், கே.எஸ் பாலசந்திரனின் வானொலிக் கால நினைவுகள், சோக்கல்லோ சண்முகத்தின் பட்சமுள்ள ஆச்சிக்கு என்பனவும் கோவிந்தராஜ், கீதாவாணி, கனிவுமதி , வெள்ளை உருவி, தர்மேந்திரா, ஆகியோரின் சிறுகதைகளும் த.ஜெயசீலன், வி.தயாபரன், ச.வால் ஆகியோரின் கவிதைகளும், சாந்தி அனுசா, பார்த்திபன் ,ரஹ்மான் ஆகியோரின் கட்டுரைகளும், வெளிவந்திருந்திருக்கின்றது. சிரித்திரன் பாணி நகைச்சுவைச் சித்திரங்களும் இரண்டு மூன்றும் இருக்கின்றது. ஒரு இடத்தில் சிரித்திரனில் வந்த சித்திரத்தை பயன்படுத்தி இருக்கின்றார்கள் (நன்றி கூறி) . வடிவமைப்பும் வழமை போலவே அசத்தல்தான்

அமுதம் என்னும் சஞ்சிகை


இலங்கை கொழும்பிலிருந்து அமுதம் என்னும் சஞ்சிகை இன்று தொடக்கம் வெளிவர தொடங்கியுள்ளது.

இரு வாரத்திற்க்கு ஒரு முறை வரும் இந்த சஞ்சிகையில்அரசியல்,கலை,இலக்கியம்போன்ற
விடயங்கள் இடம்பெற்றுள்ளன.
இம் முறை வெளிவந்துள்ள சஞ்சிகையில். சந்திரிகா மீண்டும் களத்தில், நமீதாவின் காதல், கடத்தல்van, கமல் அவதாரத்தில் வழக்கு, இந்திய தமிழ் இராணுவம், கிழக்கு ரிப்போட், ஜெயம் ரவி- பரத் கொஞ்ச நேரம் போன்ற பிரதான விடயங்களுடன்.
பாலு மகேந்திராவின் (வடிகால்) என்.எஸ் -எம் - இராமையா(கோவில்) துசாந்தினி(மீண்டும் ஸ்டெல்லா) ஆகியோரின் சிறுகதைகளும் சூரியன் எவ்.எம்.மின் புகழ் பூத்த அறிவிப்பாளர் திரு. லோசன் - அவரின் மனைவி ஆகியோருடன் சந்திப்பு, உடுவை எஸ் - தில்லைநடராசா, உடப்பூர் வீரசொக்கன், ஆகியோரின் கட்டுரைகளும், திருக்குமரன், கவிதையும், பண்ணாமத்துக் கவிராயாரின் மொழிபெயர்ப்பு கவிதையும், நடன ஆசிரியை திருமதி- வாசுகி ஜெகதீஸ்வரனுடனான நேர் காணல் ஆகிய விடயங்களை அடங்கி அமுதம் மலர்த்துள்ளது.
சஞ்சிகையின் தொடர்புக்கு

ஆசிரியர்
மீரா செந்தில்

உதவி ஆசிரியர்கள்
சி.கே. முருகேசு
சென்னை கண்மனி
ஏ.ஆர்.வி
த.ஈஸ்வரராஜா
வி.க.சர்மிளா

முகவரி
அமுதம் பப்ளிகேசன்ஸ்
2ம் மாடி, சீகல் பிளாசா
11,ஆர்த்தர்ஸ் பளேஸ்
கொழும்பு – 04
இலங்கை

தொலைபேசி
0094115754800
தொலைநகல்
0094112553863

இலங்கையில் புத்தக திருவிழா

எதிர் வரும் 8ம் திகதி தொடக்கம் 16ம் திகதி வரை இலங்கையில் மாபெரும் புத்தக திருவிழா ஒன்று இடம் பெறவுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மணடபத்தில் இடம் பெறவுள்ளது.


இன் நிகழ்வில் இலங்கையில் உள்ள பல புத்தக நிலையங்கள் இங்கே புத்தங்களை விற்பனை செய்யவுள்ளனர்

இவ் புத்தக திருவிழாவிற்க்கு 12 அனுசரணையாளர்கள் உறுதுணையாக விளக்கவுள்ளனர். இதன் பிரதான அனுசரணையாளராக குணசேன நூல் வெளியீட்டு நிறுவனம் விளங்கின்றனர்

மொத்தம் 350 விற்பனை கூடங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் 40தொடக்கம் 50வரையான விற்பனை கூடங்களை வெளிநாட்டு நூல் வெளியீட்டளர்கள் அமைக்கவுள்ளனர்.

இவ் புத்தக திருவிழாவை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை கல்வியமைச்சு பாடசாலை நூலகங்களுக்கு புத்தங்களைவங்குவதற்க்கு 6கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது.
எனவே இத் புத்தக திருவிழாவில் வருமானம் மொத்தமாக 10 கோடி ரூபாவை தாண்டும் என எதிர்பார்க்கபடுகின்றது.