இலங்கை புத்தகத் திருவிழா - “நானும் நாலு புத்தகங்களும்”

கொழும்பில் இப்போது எல்லாம் வாரா வாரம் ஏதோ ஒரு கலை இலக்கிய நிகழ்வுகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றது. ஆனால் அதில் எத்தனை தேறுபவை என்று காலம்தான் சொல்லும்.

இந்த வாரம் இலக்கிய ஆர்வலர்களை எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கி இருக்கும் நிகழ்வு புத்தக திருவிழா எனலாம்.

நேற்று எப்படியும் புத்தக திருவிழாவிற்க்கு போய் விட வேண்டும் என யோசித்த போதும். மழையும் கூடுதலாக பெய்து கொண்டு இருந்ததால் கைவிட்டுவிட்டால், இன்றைக்கும் மழை அப்படியே தான் இருந்தது. நல்ல விசயங்கள் நடைபெறுகின்ற போது மழை பெய்யும் என்று படித்த ஞாபகம். உண்மையாய் இருக்குமோ என்று எண்ணத்தோன்றியது அப்போது.

அப்படி இப்படி என்று இன்றைக்கும் புத்தகக் கண்காட்சிக்கு புறப்பட இரவு 6 மணியாகி விட்டிருந்தது.

நாங்கள் நுழைந்தது பண்டார நாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பக்கவாடாக இருக்கும் சிறிமாவோ ஞாபகார்ந்த மண்டபத்தின் வாயில் வழியாக.

ஏராளமானனோர் நிரம்பி வழிந்தாலும் பண்டார நாயக்கா சர்வதேச மண்டபத்தின் ஆடம்பரம் அதனை தூக்கி சாப்பிட்டு விட்டிருந்தது. ஒரு புத்தக கண்காட்சி போல் இல்லாமல் ஆடம்பர விடுதி ஒன்றில் நடக்கும் விருந்துபாரத்தின் ஆடம்பரம் அங்கே இருந்தது. ஆனால் நெரிசல், சத்தம் , வியர்வை , எதுவுமே இல்லாத இடம். சிறிமாவோ ஞாபகார்ந்த மண்டபத்தின் முன்னால் போடபட்டிருந்த தற்காலிக கொட்டகைகளுக்குள் ஏராளமான விற்பனைக்கூடங்கள் இருந்தாலும் சேமமடு புத்தகசாலை மட்டும் தான் அதற்குள் தமிழ் விற்பனைக் கூடம்.

சேமமடு விற்பனைக் கூடத்திற்குள்ளே நுழையும் போதே லேனா தமிழ்வாணன் கறுப்புக் கண்ணாடியுடன் சிரித்துக்கொண்டிருக்கும் புத்தகம் ஒன்றை முன்னால் வைத்திருந்ததை கண்டேன். அனேகமான இலங்கை நூல்கள் இருந்தன என்று சொல்வதைக் காட்டிலும் அங்கு இருந்தவற்றில் அனேமானவை இலங்கை நூல்கள். தமிழ் மண் பதிப்பகத்தின் நூல்கள் பலவும் இருந்தன. அவை அடுக்கப்பட்டிருந்த விதம் காரணமாக எல்லாவற்றையும் பார்க்கமுடியவில்லை. ரஞ்சகுமாரின் “மோகவாசல்” மீரா பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டு அங்கு இருந்தது. மோகவாசலை ஒரு நைந்து போன புத்தகமாக வாசித்த நினைவு. ஆனால் அங்கு ஏதுவுமே வாங்கமால் சிறிமாவோ ஞாபகார்ந்த மண்டபத்திற்குள் நுழைந்தால் அங்கு அது முற்றிலும் குளிரூட்டப்பட்டிருந்தது. இந்த குளிரூட்டல் காசு எல்லாவற்றையும் புத்தகத்தில் சேர்ந்துக் கொள்வார்களோ என பயந்து கொள்ள வேண்டியிருந்தது.

அங்கிருந்த தமிழ் விற்பனைக் கூடங்களான ஜெயா மற்றும் பூபாலசிங்கம் என்பனவற்றிலுள் ஜெயா தனியே பாடசாலை மாணவர்களுக்கான நூல்களை மாத்திரம் கொண்டிருந்தமையினால் நேராக பூபாலசிங்கம் புத்தகசாலையின் விற்பனைக் கூடத்திற்கு நுழைந்தேன். அவர்களும் தாங்கள் தான் இலங்கையின் மிகப்பெரிய தமிழ்ப் புத்தகக் கடை என்பதை காட்டுவது போல புத்தகங்களை கட்டுக்கட்டாக , ஒன்றன் மேல் ஒன்றாக வைத்திருந்தனர். எப்படி? என முடியும் பல புத்தகங்களும் விகடன் பதிப்பக நூல்களும் ஒழுங்காக அடுக்கி வைத்திருந்தனர். பா.விஜய்க்கும் வைரமுத்துவிற்கும் ஒரு கணிசமான இடத்தை ஒதுக்கி பார்ப்பதற்கு இலகுவாக அடுக்கி வைத்திருந்திருந்தனர். என் போதாத காலத்திற்கு நான் தேடும் புத்தகங்களை தான் முதல் சொன்ன மாதிரி ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்திருந்திருந்தனர். எனினும் ஒரு புத்தகத்தை அது என்ன தலைப்பு என்று பார்ப்பதற்கு குறைந்தது 15 புத்தகங்களையாவது தூக்க வேண்டியிருந்தது. என்னை போல் இன்னொரு விக்கிரமாதித்தியனும் விடாமல் கட்டுக்களை தூக்கி தூக்கி வைத்து கொண்டு இருந்தார். அவரிடம் நான் தேடும் சில புத்தகங்களின் பெயரை சொல்லி இதை கண்டனீங்களோ என்று கேட்க “நான் சும்மா ப்ரண்டோட வந்தனான் சும்மா பார்க்கிறன்” சொல்லிக் கொண்டே செல்பேசியை காதில் வைத்துக்கொண்டார். ஒரு பக்கத்தில் "year eleven science exercise book கொண்டு வந்தனீங்களே? என்று கேட்க ஆரம்பித்த பெண்மணி தான் மட்டும் அங்கு புத்தகம் வாங்க வந்தவர் போல ஊரை கூப்பிட தொடங்கினார். நானும் பொறுமையிழந்து அங்கங்கே சிணுங்கிக் கொண்டிருந்த விற்பனை பிரதிநிதி பெண்களில் ஒருவரை அழைத்து நான் தேடும் புத்தகங்கள் இதற்கு இருக்கா என கேட்டேன். அதற்கு அவர் அந்த புத்தக றாக்கையை பார்த்து தியானம் செய்து போட்டு சொன்னார். “அண்ணா நீங்கள் இங்க தேடுறதை விட வெள்ளவத்தை கடைக்கு வந்தியள் எண்டால் கட்டாயம் கிடைக்கும்” என்று. எடுத்த நான்கு புத்தகங்களையும் கொண்டு வெளியே வந்தால் பண்டார நாயக்கா மண்டபத்திற்குள்ளும் ஏறி இறங்கினோம். வெளியே வந்தால் ஒரு இடத்தில் சிறிய கூட்டம். எட்டிப்பார்த்தால் உள்ளே ஒரு இசை நிகழ்ச்சி நடக்கிறது. அந்த இடத்தை நாங்கள் ஏற்கனவே கடந்து சென்றிருந்தாலும் முதலில் நாங்கள் அதை கவனிக்கவில்லை. மெல்லிய இசை பரவ ஒரு இசைநிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது கண்காட்சிக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தாத படி.

ஏறத்தாள 400 விற்பனைக் கூடங்களில் ஆக நான்கு விற்பனைக் கூடங்கள்தான் தமிழ் என்றால் ஆங்கில சில தவிர மிகுதி அனைத்தும் சிங்கள விற்பனைக் கூடங்களே. சிங்கள விற்பனைக் கூடங்கள் நிறைந்திருந்தது போல வாங்குவதற்கு ஆக்களும் நிறைந்திருந்தனர். ஆக தமிழ் விற்பனைக் கூடங்கள் ஈ ஓட்டுவதற்கும் காரணம் என்ன? கொழும்பில் தமிழ் மக்கள் இல்லை என்பதா? அல்லது அவர்களுக்கு வாசிப்பு பழக்கம் மறந்து விட்டதா? தவிரவும் தமிழ் நூல் விற்பனையாளர்களும் தங்களின் தொழிலை professional ஆக செய்யாமல் ஏதோ சமூக சேவை செய்வது போன்று இருப்பதும் இதற்கு காரணமாய் இருக்கும் என நினைக்கின்றேன். உதாரணமாக அங்கிருந்த எம்.டி. குணசேன பதிப்பகத்திற்குள் நுழைந்த போது அங்கு சிங்கள புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்த விதம், ஒழுங்கு மிகவும் கவர்ச்சிகரமாய் இருந்தது. எம்.டி.குணசேனவின் தமிழ் வெளியீடுகள் குறித்து கேட்ட போது சிங்கள விற்பனைப்பிரதிநிதிகள் அந்த புத்தகத்தை தாங்கள் வாசித்தவர்கள் போல் கதைக்க தொடங்கினார்கள். இதுதான் தமிழ் புத்தக விற்பனைக் கூடங்கள் விட்ட பிழைகளில் ஒன்று.

என்னைப் பொறுத்தவரையில் பண்டார நாயக்கா மகாநாட்டு மண்டபம் ,சிறிமாவோ நினைவு மண்டபம் , அதற்கு முன் மெல்லிய இசை பரவ நடந்த சிங்கள இசை நிகழ்ச்சி, அங்கிருந்த மகி விற்பனைக் கூடத்தின் நூடில்ஸ், அதிகம் ஏன் பண்டார மண்டபத்தின் கழிப்பறை கூட நல்லாய் இருந்தது. புத்தக கண்காட்சிதான் சோபிக்கவில்லை.

வாங்கிய நான்கு புத்தகங்கள்.

உயிர்த்திருத்தல் - யூமா வாசுகி
வாழ்நிலம் - சுகுமாரன்
ஜே ஜே சில குறிப்புக்கள் - சுந்தர ராமசாமி
கோரைக் கிழங்கு தேடும் பெருவனக் கொழுவன் - எழில்வரதன்

17 comments:

said...

//ஏறத்தாள 400 விற்பனைக் கூடங்களில் ஆக நான்கு விற்பனைக் கூடங்கள்தான் தமிழ் என்றால் ஆங்கில சில தவிர மிகுதி அனைத்தும் சிங்கள விற்பனைக் கூடங்களே. சிங்கள விற்பனைக் கூடங்கள் நிறைந்திருந்தது போல வாங்குவதற்கு ஆக்களும் நிறைந்திருந்தனர். ஆக தமிழ் விற்பனைக் கூடங்கள் ஈ ஓட்டுவதற்கும் காரணம் என்ன? கொழும்பில் தமிழ் மக்கள் இல்லை என்பதா? அல்லது அவர்களுக்கு வாசிப்பு பழக்கம் மறந்து விட்டதா? தவிரவும் தமிழ் நூல் விற்பனையாளர்களும் தங்களின் தொழிலை professional ஆக செய்யாமல் ஏதோ சமூக சேவை செய்வது போன்று இருப்பதும் இதற்கு காரணமாய் இருக்கும் என நினைக்கின்றேன்.//

தமிழ் நூல் விற்பனையாளர்கள் தங்கள் பெயரைத்தக்கவைத்துக்கொள்ளத்தான் புத்தகக்கண்காட்சியில் பங்குபற்றுகிறார்களே அன்றி வேறொன்னுமில்லை

said...

தாசன்

புத்தகக் கண்காட்சியை விட கடற்கரை வீதியில் இருக்கும் பூபாலசிங்கத்துக்கும் , அடுத்த தெருவான கதிரேசன் வீதியில் இருக்கும் மல்லிகை காரியாலயத்துக்கும் போனால் உபயோகமாக இருக்கும். மல்லிகை வெளியீடுகளை அங்கு பார்த்து மலைத்துப் போனேன், என்னால் முடிந்தவற்றை அள்ளிக்கொண்டேன்,

உங்கள் பதிவு நன்று

said...

மாயா எனக்கு என்ன தோன்றுகின்றது என்றால் தமிழ் வாசிப்பவர்கள் இரவல் வாங்கியே வாசித்து வாசித்து புத்தக விற்பனையை நன்றாக குறைத்து விட்டார்கள் என்பதுதான்.

தாசன் பதிவிற்கு நன்றி.

said...

மாயா நீங்கள் சொல்வது சரிதான். ஏனெனில் அவர்கள் வாடிக்கையாளரை கையாளும் பாங்கும் அப்படித் தான் இருக்கிறது.

said...

//கானா பிரபா said...
தாசன்

புத்தகக் கண்காட்சியை விட கடற்கரை வீதியில் இருக்கும் பூபாலசிங்கத்துக்கும் , அடுத்த தெருவான கதிரேசன் வீதியில் இருக்கும் மல்லிகை காரியாலயத்துக்கும் போனால் உபயோகமாக இருக்கும். மல்லிகை வெளியீடுகளை அங்கு பார்த்து மலைத்துப் போனேன், என்னால் முடிந்தவற்றை அள்ளிக்கொண்டேன்,

உங்கள் பதிவு நன்று //

கானா பிரபா நானும் அப்படித்தான் யோசித்திருக்கின்றேன். தகவலுக்கு நன்றி

said...

//கானா பிரபா said...
தாசன்

புத்தகக் கண்காட்சியை விட கடற்கரை வீதியில் இருக்கும் பூபாலசிங்கத்துக்கும் , அடுத்த தெருவான கதிரேசன் வீதியில் இருக்கும் மல்லிகை காரியாலயத்துக்கும் போனால் உபயோகமாக இருக்கும். மல்லிகை வெளியீடுகளை அங்கு பார்த்து மலைத்துப் போனேன், என்னால் முடிந்தவற்றை அள்ளிக்கொண்டேன்,

உங்கள் பதிவு நன்று //


அப்ப அவர்கள் ஏன் புத்தகக்கண்காட்சிக்கு வருகிறார்கள்

said...

//பகீ said...
மாயா எனக்கு என்ன தோன்றுகின்றது என்றால் தமிழ் வாசிப்பவர்கள் இரவல் வாங்கியே வாசித்து வாசித்து புத்தக விற்பனையை நன்றாக குறைத்து விட்டார்கள் என்பதுதான்.

தாசன் பதிவிற்கு நன்றி.//

பகீ நீங்கள் சொல்லுறதை பார்த்தால் இரவல் குடுக்கிறதற்கும் ஒரு கூட்டம் இருந்து, அந்த கூட்டம் புத்தகங்களை வாங்க வேணுமே. தவிர வாசிப்பு ஆர்வம் வந்துவிட்டால் இரவல் என்பதை விரைவில் கடந்து விடும்.

said...

வாழ்நிலம்- நன்றாக இருக்கும். படித்துவிட்டு எழுதுங்கள். அங்கும் வைரமுத்து, பா.விசய் தொல்லைதானா?

said...

//மாயா said...

அப்ப அவர்கள் ஏன் புத்தகக்கண்காட்சிக்கு வருகிறார்கள் //

மாயா இந்தக் கேள்வியை கானாப்பிரபாவிற்கு தானே கேட்டியள்??

said...

நிச்சயமாக

said...

''வாழ்நிலம்''படித்து விட்டு எழுதுகின்றேன். நன்றி ஊற்று.

said...

//மாயா said...

அப்ப அவர்கள் ஏன் புத்தகக்கண்காட்சிக்கு வருகிறார்கள் //

மாயா

புத்தகக் கண்காட்சி என்பது எல்லோருக்குமே பொதுவானது, யாரும் கடைவிரிக்கலாம். ஆனால் மல்லிகைப் பந்தல் மற்றும் பூபாலசிங்கத்தின் தலைமைக் கடை ஆகியவற்றுக்குப் போனால் கண்காட்சிக்கு வைத்திருக்கும் புத்தகங்களை விட அதிக பட்டியல் இருக்கும். ஒருமுறை சென்று பாருங்களேன். நிலமை புரியும்.

said...

//எம்.டி.குணசேனவின் தமிழ் வெளியீடுகள் குறித்து கேட்ட போது சிங்கள விற்பனைப்பிரதிநிதிகள் அந்த புத்தகத்தை தாங்கள் வாசித்தவர்கள் போல் கதைக்க தொடங்கினார்கள். இதுதான் தமிழ் புத்தக விற்பனைக் கூடங்கள் விட்ட பிழைகளில் ஒன்று.//

பாராட்டப்பட வேண்டிய விடயம்.

said...

எம்மையேல்லாம் வழமையாக வாழ்த்தி செல்லும் யோகன்.உங்களுக்கு எமது நன்றிகள்.

said...

தாசன் உங்களின் அனுபவமே எனக்கும் ஏற்பட்டது. நான் இத்தனைக்கும் மூன்று முறை சென்றேன். பூபாலசிங்கம் அதிபர் ஸ்ரீதர் சிங்கை நான் இம்முறை காணவே இல்லை. அவர் நின்றிருந்தால் நிச்சயம் நல்ல புத்தக்ங்களை எடுத்து தந்திருப்பார். சென்ற முறை செங்கை ஆழியானின் பல புத்தகங்கள் இருந்தன ஆனால் இம்முறை ஒன்றையும் நான் காணவில்லை. பா விஜய்யுக்கும் வைரமுத்துவுக்கு கிடைத்த வாழ்வு எம்மவர்களுக்கு கிடைக்கவில்லை. ( நானும் என் பங்க்குக்கு ஒரு பா விஜய் ஒரு வைரமுத்து வாங்கினேன்).

என்னுடைய அனுபவ்ங்களை நான் நாளை பகிர்ந்துகொள்கிறேன்.

said...

வாழ்த்தியமைக்கு நன்றி வந்தியத்தேவன். நீங்கள் குறிப்பிட்ட போல் .சிறிதர் சிங் அங்கு இல்லை. சுரா பதிப்பகத்தாருடன் ஊர் சுற்ற போய் விட்டார். உங்களின் பதிவை எதிர் பார்க்கின்றேன்.

Anonymous said...

எனோ தானோ என்று புத்தகங்களை வைத்திருந்தால் யார் வாங்குவார்? நானும் சென்றேன், சில நிமிடங்களில் வாங்க வேண்டிய புத்தகங்களை வாங்க எனக்கு 2 நாட்கள் சென்றது.

கடைசியில் 20 புத்தகம் பொல் வாங்கினேன்.